திருச்சி மாநகரில் கடந்த சில மாதங்களாக அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் கஞ்சா, போதை மாத்திரை, போதைய ஊசி, லாட்டரி சீட் விற்பனை போன்ற குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். அதன்படி திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி பல்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை, பான் மசாலா போன்ற பொருட்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்கள் அருகில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் எச்சரிக்கை விடுத்தார். 


மேலும் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, அவர்களின் அறிவுரைப்படி திருச்சி மாநகரில் உள்ள பெட்டிகடைகள், டீ கடைகள் மற்றும் கூல்டிரிங்ஸ் கடைகளில் (குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி அருகில் உள்ள கடைகள்) குட்கா, புகையிலை, ஹான்ஸ், கூல்லிப், விமல், பான் மசாலா போன்ற இளைஞர்களின் எதிர்காலத்தை கெடுக்கும் போதை பொருட்களை விற்பனை செய்வோர் மீது காவல் துணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.




இந்நிலையில் திருச்சி கோட்டை காவல்நிலைய எல்லையில் 4 சக்கர வாகனத்தில் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் குட்கா போன்ற அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் கலைஞர் அறிவாலயம் அருகே தனிப்படையினர் வாகன சோதனை செய்து வந்தனர். அப்போது இரவு 9 மணியளவில் அவ்வழியே சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த TN 99 18363- என்ற எண்ணுள்ள Hyndai Creta காரை சோதனை செய்தபோது, அதில் சுமார் 62 மூட்டைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களான ஹான்ஸ் - 300 கிலோ, கூல்லிப் 16.5 கிலோ, விமல்-110 கிலோ மற்றும் VI Tobacco-26 கிலோ என சுமார் ரூ.3,00,000/- மதிப்புள்ள, 455 கிலோ குட்கா பொருள்களை கடத்தி வந்தது தெரியவந்தது. உடனடியாக மேற்படி குட்கா பொருட்களை பறிமுதல் செய்தும், குட்கா பொருள்களை கடத்த பயன்படுத்திய TN 99 J8363- Hyndai Creta என்ற நான்கு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தும், மேற்படி குட்கா பொருட்களை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சுனில்குமார் வயது 23, த.பெ.அசோக்குமார் என்பவரை கைது செய்தும், வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.




மேற்கண்ட குற்றவாளியை பிடித்த தனிப்படை காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள். மேலும் திருச்சி மாநகரத்தில், இளைஞர்களின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் போதை பொருட்களான கஞ்சா, குட்கா பொருள்களை விற்பனை செய்யும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் தெடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.