திருச்சி விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது... இரண்டு நாளாக தமிழகம் முழுவதும் குறிப்பாக கோவை, திண்டுக்கல், மேட்டுப்பாளையம், திருச்சி, பொள்ளாச்சி, தாம்பரம், ஈரோடு போன்ற பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் இந்து இயக்கத்திற்காக வேலை செய்கின்ற நிர்வாகிகள், அவர்களுடைய வீடுகள், வாகனங்கள், தொழில் செய்யும் பகுதிகளை குறி வைத்து கடுமையான தாக்குதல்களை ஒரு கும்பல் நடத்திக்கொண்டு இருக்கிறது. இந்த தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக அரசாங்கம் உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்த செயல்களில் யார் ஈடுபட்டிருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கேட்டுக்கொள்வதுடன், இரண்டு நாட்களுக்கு முன்னால் நாடு முழுவதுமே என்.ஐ.ஏ. சோதனையானது நடைபெற்றது. அந்த சோதனையில் தேசத்துக்கு எதிராக, இந்த நாட்டினுடைய பாதுகாப்புக்கு எதிராக, இந்த நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிற, பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் என்.ஐ.ஏ.வை தவறுதலாக பயன்படுத்தியதாக சொல்லி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தி.மு.க. தேச பாதுகாப்பில் விளையாட கூடாது. தேசத்தினுடைய பாதுகாப்பு, நாட்டினுடைய பாதுகாப்பு குறித்து நாட்டின் ஏஜென்சிகளின் அளித்த ஆதாரங்களை கொண்டு விசாரித்து நடவடிக்கை எடுத்து கைது செய்திருக்கிறார்கள். அவர்கள் பலவிதமான ஆதாரங்களை கைப்பற்றி உள்ளனர்.
மேலும் இப்படி இருக்கும் பட்சத்தில் தி.மு.க. ஒரு தவறான ஓட்டு வங்கி அரசியலை செய்யக்கூடாது. தேச பாதுகாப்பு முக்கியம். பா.ஜ.க. மற்றும் இந்து இயக்கங்களை சேர்ந்த சகோதரர்கள் மீது நடக்கின்ற தாக்குதல் மீது தமிழக காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்கள்.. பா.ஜ.க.வினர் மீதான தாக்குதலில் யாரையேனும் சந்தேகப்படுகிறீர்களா? நன்றாகவே தெரியும், யாராக இருக்க கூடும் என்று. இது தமிழக காவல் துறையின் பொறுப்பு. தீவிரமாக விசாரித்து யார், யார் இதில் தொடர்பு உள்ளது என்று அத்தனை பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை 95 சதவீதம் முடித்துள்ளாக ஜே.பி.நட்டா சொல்லியுள்ளாரே? நேற்று தெளிவாக சொல்லி உள்ளார். 95 சதவீதமான ஆரம்ப கட்டப் பணிகள் முடிவடைந்துள்ளது என்று தான் கூறினார். அதாவது அப்ரூவல், லோன் ஏஜென்சி, கையெழுத்திடுவது, கூடுதல் நிதி கொடுக்கும் நிறுவன வேலைகள் இது போன்ற ஆரம்ப கட்ட பணிகள் 95 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளன என்று தெளிவாக சொல்லி உள்ளார். இதில் தேவையில்லாமல் சிலர் அரசியல் செய்யக்கூடாது. புரிந்து கொள்ளாமல் வெற்று விளம்பரத்திற்காக அங்கு சென்று போட்டோ போடுவதை தவிர்க்க வேண்டும். தமிழக மானத்தை தயவு செய்து காப்பாற்றுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இதனை தொடர்ந்து ஆ.ராசாவின் கருத்துக்களுக்கு பா.ஜ.க. என்ன சொல்கிறது, இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லையே? வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆ.ராசா போன்ற மூன்றாம் கட்ட பேச்சாளர்கள் தி.மு.க.வில் வெற்று விளம்பரத்துக்காக பேசுவது என்று நினைத்துக் கொண்டு, இந்து மக்களை கீழ்த்தரமாக அவமதித்திருப்பதை மக்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். அதற்காக நீலகிரியில் மிகப்பெரிய அளவில் கடையடைப்பு நடைபெற்றுள்ளது. மக்கள் அவர்களுக்கு நல்ல பாடத்தை கற்றுக் கொடுப்பார்கள். தேர்தலின் போது நாம் வெற்றிவேல் யாத்திரை நடத்தினோம். அப்போது தி.மு.க. வேலை (வேல்) பிடித்தார். நம்முடைய இப்போதைய முதலமைச்சர் அன்று பயந்து கொண்டு வேலை பிடித்தார். ஓட்டுக்காக இந்து மக்களை ஏமாற்றும் செயலை தி.மு.க. நிறுத்திவிட்டு, இந்துக்களின் மனதை புண்படுத்தும் செயலையும் நிறுத்திவிட்டு, ஆக்கப்பூர்வமான வளர்ச்சி என்ன. இந்த நாடு எப்படி வளர்ச்சி அடைய வேண்டும். தமிழகம் எப்படி வளர்ச்சி அடைய வேண்டும். இந்து மக்களை புண்படுத்தும் செயல்களை தி.மு.க. நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர்களது மனதை புண்படுத்தினால் நிச்சயமாக தக்க பாடம் புகட்டுவார்கள். ராகுல் காந்தியின் நடைபயணம் பற்றி உங்களது கருத்து? ஆரம்பத்திலேயே தோல்வியுற்றுள்ளது. அவர் கேரளாவினுள் சென்றபோது கோவாவில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் வெளியே சென்றுவிட்டனர். காஷ்மீர் செல்வதற்குள் காங்கிரஸ் கட்சியே காணாமல் போய் விடும். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை தடை செய்வதாக செய்திகள் வருகிறதே? இதற்கு நான் பதில் கூற முடியாது. உள்துறை அமைச்சகம் இதற்கான நடவடிக்கையை எடுக்கும்.
மேலும் ஆல் இந்தியா ரேடியோவின் செய்திப்பிரிவு திருச்சியில் உள்ளது. விவசாயிகள், மீனவர்கள் இதை வைத்துதான் பயன் பெறுகிறார்கள். இதனை சென்னைக்கு மாற்றுவதாக தகவல் வெளியாகிறதே? திருச்சி வானொலி எந்த நேரத்திலும் மாற்றப்படாது. வதந்திகளை நம்ப வேண்டாம். ஆ.ராசாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த, கோவை மாவட்ட பா.ஜ.க. நிர்வாகி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதே? வன்கொடுமை தடுப்பு சட்டம் எந்த இடத்தில் முறையாக பயன்படுத்தப்பட வேண்டுமோ அங்கு தான் பயன்படுத்த வேண்டும். நான் எஸ்சி கமிஷன் துணை தலைவராக தமிழகத்தில் பணியாற்றியுள்ளேன். யார் மீது எந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டுமோ அவ்வாறு பயன்படுத்துவது இல்லை. தி.மு.க. தலைவர் இந்து மக்களை கொச்சையாக பேசுவார். அவர் பேசியது தவறு என்று பேசியவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது தமிழக அரசாங்கம் எந்த அளவு பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளையும் பொதுமக்களையும் மற்றும் கேள்வி கேட்பவர்களையும் எப்படி சட்டங்களை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பா.ஜ.க.வின் நயினார் நாகேந்திரன் தமிழக முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விரைவில் தி.மு.க.வில் இணைவார் என்ற செய்தி வெளியாகி வருகிறதே? யூகங்களுக்கு நான் பதில் சொல்ல முடியாது. பா.ஜ.க.வின் பட்டியல் அமைப்பாக இருக்கட்டும், நீங்களாக இருக்கட்டும், ஆ.ராசாவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கவில்லை என்று அதிருப்தி உள்ளதே? ஆ.ராசாவுக்கு பதிலடி பட்டியல் அணி தான் கொடுக்க வேண்டும் என்பது கிடையாது. இது மக்களின் பிரச்சனை. இந்து மக்களின் பிரச்சனை. ஒட்டுமொத்த கட்சியினரும் இதற்காக வேலை செய்து கொண்டிருக்கிறோம். அனைத்து மக்களும் சேர்ந்து இதற்கு பதில் கொடுப்போம் என்றார்.