திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர், தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கூறுகையில், “அகில இந்திய அளவில் பாஜகவிற்கு எதிர் அணிகள் தான் அதிகம் ஆகையால் அகில இந்திய அளவில் பாஜகவிற்கு எதிராக உள்ள அணிகளை ஒன்றிணைக்கும் பணியில் தமிழக முதலமைச்சர் ஈடுபட வேண்டும். இந்நிலையில் நேற்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை வரலாற்று சிறப்பு ஆகும். மேலும் முதலமைச்சர் அகில இந்திய பார்வையோடு அரசியல் காய்களை நகர்த்தி வருகிறார். பா.ஜ.க வை வரும் நாடாளுமன்ற தேர்தலில் வீழ்த்த வியூகம் வகுத்து உள்ளார். குறிப்பாக மு.க.ஸ்டாலின் நேற்று பிறந்தநாள் விழா என்று மட்டும் இல்லாமல் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான அரசியல் பரப்புரையின் தொடக்கவுரையாக பேசி உள்ளார். விடுதலை சிறுத்தையின் குரலுக்கு வலு சேர்க்கும் வகையில் முதலமைச்சர் உடைய பேச்சு இருந்துள்ளது. அதனை வரவேற்கிறோம். மு.க. ஸ்டாலின் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணமாக நாடு முழுவதும் சென்று மாநில அரசியல் தலைவர்களை சந்திக்க வேண்டும். குறிப்பாக ஜெகன்மோகன் ரெட்டி , சந்திரபாபு நாயுடு , கேசிஆர், உத்தவ் தாக்ரே, மமதா பானர்ஜி போன்ற தலைவர்களையும் சந்திக்க வேண்டும்.
அகில இந்திய அளவில் பாஜகவிற்கு எதிரணி தான் அதிகம். ஆனால் அவற்றை ஒருங்கிணைப்பதில் தான் தேக்கம். அந்த தேக்கத்தை உடைப்பதற்கான ஒரு பிரகடனம் தான் முதல்வருடைய உரை. பாஜக எதிர் அணியை ஒருங்கிணைக்க அனைத்து மாநிலங்களுக்கும் பயணம் மேற்கொண்டு முதல்வர் பயணிக்க வேண்டும். அகில இந்திய அளவில் மு.க ஸ்டாலினின் பங்களிப்பு தேவை என்று பலரும் கூறி உள்ளனர். திமுக அதற்கான முன்னெடுப்பை எடுக்கும் என்பதற்கு உதாரணமாக மு.க ஸ்டாலின் செயல்பட்டுள்ளார். பா.ஜ.கவை வீழ்த்த மு.க ஸ்டாலின் திடீரென எந்த முடிவும் எடுக்கவில்லை. அவர் இதற்கு முன்பாகவே வியூகம் வகித்து விட்டார். காங்கிரசுடன் இனைந்து பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பது ஏற்கனவே எங்கள் தரப்பிலும் முன் வைக்கபட்ட கோரிக்கை தான்” என தெரிவித்தார்.
சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து :
சாமானிய மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த அரசு கார்ப்ரேட்டுக்கு ஆனது என்பதை அவர்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றனர். அதானி வீழ்ந்து போகாமல் பாதுகாப்பதில் தான் மோடிக்கு அக்கரை இருக்கிறது. மக்களின் நலன் மீது இல்லை. மத்திய அரசு சமையல் விலை உயர்வு அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இளங்கோவன் 70ல் இருந்து 80,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்