தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி கடந்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மேலும் இம்மாதம் 2 ஆம் தேதி திருச்சி மாநகராட்சியில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் மாமன்ற உறுப்பினராக பதவி ஏற்றனர். இந்நிலையில் நேற்று திமுக தலைமை கழகம் திருச்சி மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. இதனை தொடர்ந்து இன்று திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் ஒருமனதாக மு.அன்பழகன் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்பு தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் முன்னிலையில் அன்பழகன் மேயராக பதவியேற்றார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சி அதிமுகவை சேர்ந்த 3 மாமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொள்ளவில்லை. மேலும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் மேயர் அன்பழகனுக்கு பொன்னாடை, பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகள் தெரிவித்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகளில் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக தனித்து 49 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் கூட்டணி கட்சியினரை சேர்த்து 59 இடங்களை கைப்பற்றியது. மீதமுள்ள 6 வார்டு கவுன்சிலர்கள் 3 அதிமுகவினர், 2 சுயேச்சை, 1 அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த கவுன்சிலர் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் திருச்சி மாநகராட்சியின் முதல் ஆண் மேயராக மு.அன்பழகன் தேர்வு செய்யபட்டுள்ளார். திருச்சி மாநகராட்சி மேயராக தேர்வு செய்யபட்ட மு. அன்பழகனை அமைச்சர் கே.என்.நேரு தான் முன்னிறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
66 வயதாகும் மு.அன்பழகன், MA பட்டதாரி ஆவார். முழு நேர அரசியல்வாதியாக செயல்பட்டு வரும் இவர் தற்போது திருச்சி மாநகர செயலாளர் பதவி வகித்து வருகிறார். நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 27ஆவது வார்டில் வெற்றி பெற்றார். மேலும் 1980 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார். 1993 முதல் 1998ஆம் ஆண்டு வரை மாவட்ட கழக இளைஞரணி அமைப்பாளர், 1999ஆம் ஆண்டு முதல் திருச்சி மாநகர செயலாளர். பின்பு 2001 முதல் 2011ஆம் ஆண்டு வரை துணை மேயர். 2011 தேர்தலின்போது, அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட வழக்கில் கைதாகி மத்திய சிறையில் இருந்தபடி பழைய 32 ஆவது வார்டில் போட்டியிட்டு, பிரச்சாரத்துக்கே போகாமல் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து 2014ஆம் ஆண்டு திருச்சி நாடாளுமன்ற தேர்தலில் 3 லட்சத்து 8 ஆயிரத்து வாக்குகள் பெற்று இரண்டாமிடம்.திருச்சி மாநகராட்சியாக மாற்றப்பட்டதிலிருந்து நடத்தப்பட்டுள்ள 5 தேர்தல்களிலும் திமுக வேட்பாளராக மு.அன்பழகன் போட்டியிட்டு வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும் அமைச்சர் கே.என்.நேருவின் நிழல் போல் செயல்பட்டு வருபவர் தான் அன்பழகன் நேருவிற்கு மிகுந்த விசுவாசி ஆகவும் நம்பிக்கைக்குரிய இடத்தில் அன்பழகன் இருக்கிறார்.ஏற்கெனவே 2 முறை துணைமேயராக இருந்த மு.அன்பழகனுக்கு, இம்முறை மேயர் பதவியைப் பெற்றுத்தர முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பரிந்துரைத்துள்ளதாக தேர்தல் பிரச்சாரத்தின்போது அமைச்சர் கே.என்.நேரு கூறியிருந்தார். இந்நிலையில் திருச்சி மாநகராட்சியாக மாற்றப்பட்டு 28 ஆண்டுகளுக்கு பிறகு, முதன் முறையாக திமுகவை சேர்ந்தவர் மேயர் பதவியை கைப்பற்றியுள்ளார். குறிப்பாக திருச்சி மாநகரத்தில் முதல் ஆண் மேயர் மு.அன்பழகன் ஆவார்.