வருகின்ற மக்களவைத் தேர்தலில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய மதிமுக கட்சி சார்பாக துரை வைகோ தீப்பற்றி சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் கடந்த இரண்டு வாரமாக திருச்சி தொகுதி முழுவதும் தீவிர சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு மக்களிடையே வாக்குகளை சேகரித்து வருகிறார்.


குறிப்பாக தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியவர்கள் இணைந்து திறந்தவெளி வாகனத்தில் பொதுமக்கள் இடையே துரை வைகோ அவர்களுக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர். அதேசமயம் இந்தியாவில் திருச்சி தொகுதியை முன்மாதிரியான இடமாக மாற்றுவேன், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவேன், சாலைகள் விரிவாக்கம் ,மேம்பாலம் அமைப்பது, புதிய தொழிற்சாலைகள் உருவாக்குவது என பல்வேறு வாக்குறுதிகளை மக்களிடம் கொடுத்து துரை வைகோ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.


மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதல் கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூட வேண்டும் என திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்களிடையே பேசிய கமல்ஹாசன் கூறியது..




திருச்சியில் மதக்கலவரம் குறைவு


இந்தியாவில் எந்த இடத்தில் மதக்கலவரம் நடந்தாலும் தமிழ்நாட்டில் மிகக் குறைவு. அதுவும் திருச்சியில் இல்லை என்று சொன்னால் மிகை ஆகாது. நல்ல அரசு, நல்ல தலைமையின் அடையாளம் அது. அது தொடர வேண்டும் என்பதற்காக இங்கே வந்திருக்கிறேன். நான் மதிக்கும் மிக முக்கியமான புத்தகம் 'இந்திய அரசியலமைப்புச் சட்டம்'. அந்த புத்தகம் பாதுகாக்கப்பட்டால் தான் நீங்கள் வணங்கும் மற்ற புத்தகங்கள் எல்லாம் பாதுகாக்கப்படும்.


எந்த புத்தகமாக இருந்தாலும் சரி. நான் மதம் சார்ந்த புத்தகங்களைப் பற்றி சொல்லவில்லை. அதை எழுதக்கூடாது, இதை படிக்கக்கூடாது என்று சொல்லும் பன்முகத்தன்மை, விரிந்த நோக்கம் இல்லாத எந்த அரசும் ஆபத்தானது. அவை குடியுரிமைச் சட்டங்கள் மற்றும் அரசியல் சட்டங்களின் மீது கை வைக்க தொடங்கும் போக்குதான் அது. அதைப்பற்றி விமர்சிக்க வேண்டியது என் கடமை. ஐந்தாண்டுக்கு ஒரு முறை அந்த கடமையை நீங்கள் செய்து கொண்டே இருந்தால்தான் நாடு நலமாக இருக்கும். 




என் தம்பிக்கு வாக்கு கேட்டு வந்துள்ளேன்..


”நான் இங்கு சீட்டுக்காக வரவில்லை.. நாட்டுக்காக வந்திருக்கிறேன். எனக்கு ஒரு சீட்டு, சின்ன பிள்ளையாக இருக்கும்போதில் இருந்து கொடுத்து வைத்திருக்கிறீர்கள். இப்போது என் தம்பிக்கு சீட்டு கொடுங்க.. என கேட்கிறேன்” என பேசினார். 


மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை, அமலாக்கத்துறை சோதனை என அனைவரையும் அச்சுறுத்தி வருகிறார்கள். இவர்கள் அனைவரும் மக்களுக்காக பணியாற்ற வேண்டும். ஆனால் வேறு ஒருவருக்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மக்களையும், அரசியலமைப்பு சட்டத்தையும் காப்பாற்ற வேண்டும் என்றால் ,நாம் அனைவரும் ஒன்று இணைந்து இந்த இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என தெரிவித்தார்.