Lok Sabha Election 2024:  திருச்சி மாநகராட்சியில் இப்போது 65 வார்டுகள் உள்ளது. திருச்சி மாநகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, மாநகரை சுற்றியுள்ள வளர்ச்சி அடைந்த பகுதிகளை இணைத்து 100 வார்டுகள் கொண்டதாக திருச்சி மாநகராட்சி  விரிவாக்கம் செய்யப்படும் என்று கடந்த 2021 ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபையில் நகராட்சி நிர்வாகத் துறை, மானியக் கோரிக்கையில் அமைச்சர் நேரு அறிவித்தார். இதனைத்தொடர்ந்து மாநகராட்சி விரிவாக்க பணிகளுக்காக அருகிலுள்ள ஊராட்சிகளை இணைக்கவும், வார்டுகளை சீரமைக்கும் பணிகளையும் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகங்கள் பணிகளை தீவிரமாக தொடங்கினர். குறிப்பாக திருச்சி மாநகராட்சி விரிவாக்கம் செய்யும் வகையில் அந்தநல்லூர் ஒன்றியம், மல்லியம்பத்து, மருதாண்ட குறிச்சி, கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர், மணிகண்டம் ஒன்றியம், முடிகண்டம், மேக்குடி, கே. கள்ளிக்குடி, தாயனூர், நாச்சிகுறிச்சி, சோமரசம்பேட்டை, நாகமங்கலம், புங்கனூர், திருவெரும்பூர் ஒன்றியம், பணைய குறிச்சி ,குண்டூர், நவல்பட்டு, சோழமாதேவி கீழக்குறிச்சி, லால்குடி ஒன்றியம், தாளக்குடி, அப்பாதுரை எசனைக்கோரை, புதுக்குடி, மண்ணச்சநல்லூர் ஒன்றியம், மாதவப்பெருமாள் கோயில், பிச்சாண்டார் கோயில், கூத்தூர், ஆகிய 25 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு 100 வார்டுகளாக திருச்சி மாநகராட்சி உருவாக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.




தாயனூர் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு 


இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் தாலுக்கா மணிகண்டம் ஒன்றிய தாயனூர் ஊராட்சி பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனு அளிக்க வந்தனர். அப்போது அப்பகுதி மக்கள் கூறுகையில்.... தாயனூர் கிராமம் 75% விவசாயம் சார்ந்த கிராமம் ஆகும் இந்த ஊராட்சியில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவு உள்ள விவசாய நிலங்கள் கொண்ட ஒரு பகுதியாகும். இந்தப் பகுதியை திருச்சிராப்பள்ளி மாநகராட்சியுடன் இணைக்க இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு எங்கள் தாயனூர் பஞ்சாயத்து பகுதி மக்களின் உரிமைகளையும் சலுகைகளும் பறித்து கடுமையான வரி விதிப்பு ஏற்படுத்தி வாழ்வாதாரத்தை சீர்குலைத்து நிதிச்சுமையினை ஏற்படுத்தும் என்று நாங்கள் கருதுகிறோம். எங்களுக்கு வேறு வாழ்வாதாரம் இல்லாததால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் விவசாயக் கூலி தொழிலாளர்களாக வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.


இந்நிலையில் தாயனூர் ஊராட்சி பகுதியை மாநகராட்சி பகுதியுடன் இணைத்தால் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் அனைவரின் வேலை வாய்ப்பும் பறிபோகும் கடுமையான வரிச்சுமையினை ஏற்படுத்தி விவசாயத்தையும் விவசாயக் கூலி தொழிலாளர்களையும்,  வாழ்வாதாரத்தை பாதிக்கும் சூழ்நிலை ஏற்படும். எனவே இது சம்பந்தமாக பலமுறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், நாங்கள் தற்போது நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு எடுத்துள்ளோம். எங்கள் பகுதியை மாநகராட்சியுடன் இணைக்க மாட்டோம் என்று அறிவிப்பு வந்தால் மட்டுமே நாங்கள் வாக்குச்சாவடிக்கு செல்வோம் இல்லை என்றால் நாங்கள் தேர்தலை புறக்கணிக்க உள்ளோம், என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.