Lok Sabha Election 2024 : திருச்சி மாவட்டம், பாராளுமன்ற தேர்தல் 2024, தேதி அறிவிக்கப்பட்டதன் காரணமாக 16.03.2024 பிற்பகல் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. ஆகையால் அனைவரும் தேர்தல் விதி முறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க குழுக்கள், புகார் எண் அறிவிப்பு..
மேலும் திருச்சி மாவட்டத்தில், தேர்தல் நடத்தை விதிகளை கண்காணித்திடும் பொருட்டு, 81 பறக்கும் படைகள். 81 நிலையான கண்காணிப்புக்குழுக்கள், 9 வீடியோ நிலையான கண்காணிப்பு குழுக்கள், வேட்பாளர்களால் தேர்தலுக்காக செலவிடப்படும் தொகையினை கண்காணித்திட 9 செலவு கண்காணிப்பு குழு, 9 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்களை 1800 599 5669 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தெரிவிக்கலாம். மேலும் புகார்களை 6384001585 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கும் புகார்களை தெரிவிக்கலாம். புகார்கள் அனைத்திற்கும் 24 மணி நேரத்திற்குள் தீர்வுகள் மேற்கொள்ளப்படும்.
வாக்காளர் மாவட்ட தொடர்பு மையம்:
மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் தொடர்பான விபரங்களை பொதுமக்கள் பெற ஏதுவாக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வண்ணம் வாக்காளர் மாவட்ட தொடர்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், கட்டணமில்லா தொலைபேசி எண் 1950 ஆகும். எனவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் தொடர்பாக விபரங்களை 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதி மீறல்கள் தொடர்பான புகார்களை ஊ- ஏபைடை என்ற மொபைல் செயலி மூலமாகவும் தெரிவிக்கலாம். இதில் வரப்பெறும் புகார்களுக்கு 100 நிமிடத்தில் உரிய விசாரணைக்கு பிறகு தீர்வு காணப்படும்.
துப்பாக்கிகளை ஒப்படைக்கவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை
திருச்சி மாவட்டம் ஊரகப் பகுதி மற்றும் மாநகரப்பகுதியில் துப்பாக்கி உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருக்கும் உரிமதாரர்கள், தங்களது துப்பாக்கிகளை தங்கள் பகுதிக்குட்பட்ட காவல் நிலையத்திலோ அல்லது அங்கீகாரம் பெற்ற துப்பாக்கி பாதுகாப்பு கிடங்கிலோ உடனடியாக ஒப்படைத்து ஒப்புகை சீட்டு பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தேர்தல் நடத்தை விதிகள் முடிவுற்ற பிறகு, மீண்டும் தங்கள் துப்பாக்கிகளை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஒப்படைக்கத் தவறும் நபர்கள் மீது இந்திய தண்டணை சட்டம் பிரிவு -188-ன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் , மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.