Lok Sabha Election 2024: பாராளுமன்ற தேர்தல்- 2024 முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் தேர்தல் நடத்தை அமலுக்கு வந்துள்ளதை தொடர்ந்து அச்சக உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் நகை அடகு கடை நடத்துவோர் ஆகியோர்களுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்குட்பட்டு வியாபாரம் மற்றும் தொழில் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர்  பிரதீப் குமார் தலைமையில்  நடைபெற்றது.


இக்கூட்டத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் , மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்ததாவது:


இந்திய தேர்தல் ஆணையமானது பாராளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் 2024 க்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி 16.03.2024 முதல் தேர்தல் முடியும் வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேர்மையான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடத்திட பேருதவி புரிகின்றது. தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு வியாபாரம், தொழில் போன்றவற்றை செய்பவர்கள் செயல்பட வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், அச்சகங்கள், நகை அடகு பிடிப்போர் மற்றும் திருமணம் தங்கு விடுதிகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.




அச்சக உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டியவை:


மக்கள் பிரிநிதித்துவ சட்டம் பிரிவு 127A ன் கீழ் தேர்தல் காலங்களில் அச்சக உரிமையாளர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சமயங்களின் அடிக்கப்படும் அனைத்து போஸ்டர், துண்டு பிரசுரம், பேனர் போன்றவை எவையாயினும் அது எந்த அச்சகத்தால் அடிக்கப்பட்டது என்ற விபரம் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். அச்சடிக்கப்பட உள்ள போஸ்டர், துண்டு பிரசுரம், பேனர் போன்றவற்றின் வாசகங்கள் எவையும் இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகவோ அல்லது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையிலோ அமையக் கூடாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு அச்சடிக்கப்படும் நோட்டிஸ், பேனர் நகல் ஒன்றுடன், ஒரு உறுதி மொழி படிவத்துடன் மாவட்ட நீதிபதி,  மாவட்ட ஆட்சியருக்கு  அறிக்கை அனுப்பி வைத்திட வேண்டும். அவ்வாறு அச்சடிக்கப்படும் நோட்டிஸ், பேனர் ஆகியன நகல் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டாலும் அதுவும் சம்பந்தப்பட் அச்சக்தின் பிரசுரமாகவே கருதப்படும். அச்சடிக்கப்பட உள்ள போஸ்டர், துண்டு பிரசுரம், பேனர் போன்றவற்றின் சரியான எண்ணிக்கையை குறிப்பிட்டு பற்றுச் சீட்டு வழங்கப்பட வேண்டும். மேற்படி எண்ணிக்கையினை கூட்டியோ அல்லது குறைத்தோ காட்டக் கூடாது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 127 மீறி செய்யபடும் எந்த ஒரு அச்சக உரிமையாளர் மீதும் 6 மாதம் மற்றும் இரண்டாயிரம் வரை அபதாரம் விதிக்கப்படுவதுடன் அச்சக உரிமையும் ரத்து செய்யப்பட வாய்புள்ளது.




தேர்தல் நேரத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு முன் அனுமதி கட்டாயம்


தேர்தல் காலங்களில் முன்பதிவு செய்யப்படும் நிகழ்ச்சிகள் அரசியல் சார்பானவை மற்றும் சார்பற்றவை பிரித்துக்கொள்ள வேண்டும். அரசியல் சார்பான நிகழ்ச்சிகள் எனில் காவல்துறை மற்றும் பிற அனுமதிகள் முறையாக பெறப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். நிகழ்ச்சி நடத்துவதற்கு பெறப்படும் உண்மையான கட்டண தொகை தெரிவிக்கப்பட வேண்டும். கூட்டியோ அல்லது குறைத்தோ தெரிவிக்க கூடாது. அரசியல் நிகழ்ச்சிகளில் பணமோ அல்லது பரிசு பொருட்களோ விநியோகம் செய்வதை கண்காணிக்க வேண்டும். அவ்வாறான நிகழ்வுகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கும், காவல்துறையினருக்கும் தெரிவித்திடல் வேண்டும். தனியார் நிகழ்ச்சி என்ற பெயரில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நபர்களுக்கு பணமோ, பரிசு பொருட்களோ போன்றவை இலவசமாக விநியோக்கப்பட வாய்புள்ளது. அவ்வாறான இனங்கள் எதுவும் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். திருமண மண்டபங்களில் வாக்காளர்களை கவரும் விதத்தில் மொத்தமாக சாப்பாடு, பிரியாணி போன்றவை தயாரிக்க அனுமதிக்க கூடாது. திருமண மண்டபங்களில் வாக்காளர்களை கவரும் விதத்தில் பரிசு பொருட்களை சேரித்து வைக்கும் குடோனாக பயன்படுத்திட அனுமதி இல்லை.