தேசிய ஜனநாயக் கூட்டணி ('National Democratic Alliance (NDA), கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இடம்பெற்றுள்ளது. கூட்டணிக்கு தேனி மற்றும் திருச்சி நாடாளுமன்ற தொகுதி என இரு தொகுதிகள் கொடுக்க ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர். இதில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும், ப.செந்தில்நாதன் BE, MBA(UK), அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராகவும் திருச்சி மாமன்ற உறுப்பினராகவும் பணியாற்றுகிறார்.




திருச்சி அமமுக வேட்பாளர் செந்தில்நாதன்:


திருச்சி மாநகர் கே.கே நகரில் வசித்து வருகிறார். இவர் முக்குலத்தோர்-கள்ளர் வகுப்பை சேர்ந்தவர். இவரின் தந்தை மறைந்த காவல் துறை கண்காணிப்பாளர்  தி.பஞ்சநாதன். தாயார் ருக்மணி அம்மாள். அவர் விரிவுரையாளராக (புதுகை மன்னர் அரசு கல்லூரி மற்றும் திருச்சி ஈவேரா அரசு கல்லூரி) பணிபுரிந்துள்ளார்.


இவரது பெற்றோர் பணி நிமித்தமாக புதுக்கோட்டையில் இருந்த பொழுது, புதுகை அரசு மருத்துவமனையில் பிறந்தார். தொடக்க கல்வியை புதுக்கோட்டையிலும் (PSK matriculation, பிரகதாம்பாள் பள்ளி), பின்னர் திருச்சியில் (St.John's Vestry, Campion Anglo Indian school) பள்ளி படிப்பை முடித்தார்.கல்லூரி படிப்பில் இளங்கலையாக கெமிக்கல் இன்ஜினியரிங் ( BE, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) 1998-ல் படித்துள்ளார்.




அரசியல் பயணம் தொடங்கியது எப்படி?


சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழ்த்தில் படிக்கும் பொழுது புரட்சித்தலைவியால் ஈர்க்கப்பட்டு, 1996 ஆம் ஆண்டு அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக இணைந்தார். பின்னர் முதுகலை வணிக மேலாண்மை 4 L (MBA University of Wales, Cardiff UK) முடித்துள்ளார். முதுகலை பட்டம் படிக்கும் பொழுதே சிங்கப்பூரில் வேலை கிடைத்து, 1999 முதல் 2004 ஆண்டு வரை தனியார் மற்றும் சிங்கப்பூர் அரசு சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் மென்பொருள் வல்லுனராக வேலை பார்த்துள்ளார்.


2004 முதல் புனேவில் உள்ள Tata கம்பெனிகளிலும், 2006 ஆண்டு முதல் பெங்களூரில் உள்ள மென்பொருள் நிறுவனங்களிலும் வேலை பார்த்து வந்தார். 1996 முதல் தமிழகமெங்கும் நடந்த தேர்தல் மற்றும் கட்சிப் பணிகளில் அடிப்படை உறுப்பினராக பணியாற்றி வந்த இவர், 2018-ல் அ.தி.மு.க.வில் அன்றைய காலகட்டத்தில் நிலவி வந்த சூழ்நிலையில்,  TTV தினகரன் பால் ஈர்க்கப்பட்டு, அவரின் தலைமை ஏற்று, அதுவரை பார்த்து வந்த மென்பொருள் வேலைகளை விட்டுவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபடுத்திக் கொண்டார்.




செந்தில்நாதன் கவுன்சிலர், மற்றும் மாவட்ட செயலாளராக தேர்வு..


அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில், திருச்சி மாநகர் மாவட்ட விவசாய அணி செயலாளராகவும் பின்னர் மாநில இளைஞர் பாசறை தலைவராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற திருச்சிராப்பள்ளி மாமன்ற தேர்தலில், 47- வார்டு மக்கள், ஆண்ட ஆளுகின்ற கட்சிகளை தோற்கடித்து இவரை மாமன்ற உறுப்பினராக வெற்றி பெறச் செய்தனர். கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டு (ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி) பணியாற்றி வருகிறார்.


இவரது மனைவியும் மென்பொருள் துறையில் பணியாற்றிவிட்டு, தற்பொழுது ஆராய்ச்சி பட்டய படிப்பில் (Phd) ஈடுபட்டு வருகிறார். முதல் தலைமுறை அரசியல்வாதியான இவருக்கு பள்ளி செல்லும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 


திருச்சி நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை வெளியூர் வேட்பாளர்களையே பார்த்து வந்த திருச்சி மக்களுக்கு, முதன்முறையாக அதுவும் பிரதான கூட்டணியில், திருச்சி தொகுதியில் பிறந்து வளர்ந்த உள்ளூர் வேட்பாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.