தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு,  திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைகின்ற இடத்தினையும், மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்களின் வரைபடத்தினையும்  நேரில் பார்வையிட்டு  ஆய்வு செய்து அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.  பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது.. பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ்நிலையத்தின் விரிவான திட்ட அறிக்கையினை நேற்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்தேன். அவரும் பார்த்துவிட்டார். சீக்கிரம் டெண்டர் தருணத்துக்கு கொண்டுவரப்படும். வேலை தொடங்கினால் ஒரு வருடத்துக்குள் முடிக்க வேண்டும். அதற்கு முன்னதாக ரூ. 37 கோடிக்கு மண் நிரப்பஅனுமதி பெறப்பட்டுள்ளது. அந்த பணிகள் விரைவில் தொடங்கும். இங்கு 8 அடி உயரத்துக்கு மண் போட வேண்டியுள்ளது. இந்த பேருந்து நிலையத்துக்கு முதற்கட்ட பணிக்கு ரூ. 350 கோடி ஒதுக்கப்படுகிறது. 2&ம் கட்டமாக மார்கெட், வணிக வளாகம், லாரி செட் போன்றவை அமைக்கப்பட உள்ளது. முழுமையாக அரசாங்கத்துக்கு சொந்தமான இடம் இருப்பதால் பணிக்கு எந்த பிரச்சினையும் இல்லை. பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் 280 கடைகள் வருகின்றன. 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார்.





மேலும் மணப்பாறை சிப்காட்டில் கூட்டுக்குடி நீர்திட்டம் மற்றும் உணவு பதப்படுத்தும் அலை தொடங்க முதல் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அரிஸ்டோ தொங்குபால பணிகளை தொடங்க அனுமதி கிடைத்துள்ளது. 10 தினங்களில் விடுபட்ட பணிகள் தொடங்கும்.   பஞ்சப்பூரில் இருந்து கம்பரசம்பேட்டை வழியாக கரூர் பைபாஸ் சாலைக்கு செல்லும் ரிங்க் ரோடு பணிகளுக்கும் அனுமதி கிடைத்துள்ளது. காவிரியில் புதிதாக பாலம் கட்டப்பட உள்ளது. பஸ்நிலையத்தில் இருந்து திண்டுக்கல் சாலைக்கு அப்ரோச் சாலை அமைக்கப்பட உள்ளது. திருச்சி மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட உள்ள பகுதிகளுக்கு அடுத்த ஆண்டு கூட்டுகுடிநீர் திட்டம்  மற்றும் பாதாள சாக்கடைகள் திட்டம் கொண்டுவரப்படும். திருச்சி மாநகரம் இனிமேல் மணப்பாறை, விராலிமலை பகுதியை நோக்கி விரிவடையும். மேற்கண்ட பகுதிகளில்  ஏராளமான ஏரிகள் உள்ளன. அதனால் தண்ணீர் பிரச்சினை வராது. பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 350 பேருந்துக்கள் நிற்க வசதி செய்யப்பட உள்ளது. மதுரை போன்று எதிர்காலத்தில் திருச்சியும் தூங்கா நகரமாக மாறும் என்றார்.





இதனை தொடர்ந்து சொத்துவரி உயர்வு தொடர்பாக எதிகட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர்  நேரு பதில் கூறுகையில்  1987ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் கிராமப்புறங்களில் 100 சதவீதம், நகரங்களில் 200 சதவீதம், தொழிற்சாலைகளுக்கு 300 சதவீதம் வரி உயர்த்தப்பட்டது. மீண்டும் 1993 ல் அவர்களின் ஆட்சியில் 100,150, 250 சதவீதம் வரி உயர்த்தப்பட்டது. ஆனால் 1998 ல் தி.மு.க. ஆட்சியில் 50,75,125 என்ற விகிதத்தில்தான் வரி உயர்த்தப்பட்டது. இப்போது கோவையில் 600 சதுரஅடி வீட்டுக்கு ரூ. 2000 வரிவிதிக்கப்பட்டு இருக்கிறது என்றால் பூனாவில் ரூ. 6000, ரூ. 7000 செலுத்த வேண்டும். மத்திய அரசிடம் இருந்து நமக்கு ரூ. 7 ஆயிரத்து 600 கோடி நிதி பாக்கி வர வேண்டியுள்ளது. நடப்பு ஆண்டில் ரூ. 15 ஆயிரம் கோடி அவர்கள் தர வேண்டும். மத்திய அரசின் நிதி பெற ஏற்கனவே வரிகளை உயர்த்தி பிற மாநிலங்கள் தகுதி பெற்றுவிட்டன. இந்தியாவின் பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் குறைவாகவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.