அரியலூர் மாவட்டத்தில்  புதியதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.


தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்திலுள்ள அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில்  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தும் மேலும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் தொடர்ச்சியாக வழங்கி வருகிறார். அந்த வகையில்  அரியலூர் மாவட்டத்தில் இன்று அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஐந்து தளங்களைக் கொண்ட 700 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனையின் பல்வேறு மருத்துவ சேவைகளை துவக்கி வைத்தார். 




இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் பயிலும் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் மருத்துவ அங்கிகளை வழங்கினார். பின்னர், விழாப்பேருரை ஆற்றி சிறப்பித்தார். அதன்பின்னர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், கூட்டுறவுத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் 2,539 பயனாளிகளுக்கு ரூ.13.68 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும்  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார். இவ்விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன்,  போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன், கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர்  தலைமையுரையாற்றினார். சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் முன்னிலை உரையாற்றினார். முன்னதாக அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மருத்துவக் கல்லூரி அரங்கத்திற்கு அனிதா பெயர் சூட்டப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 




இந்நிலையில் மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்.. ”நான் தேர்தல் பிரச்சாரத்தில் நீட் தேர்வு ரகசியம் என்று குறிப்பிட்டதை தற்போது எதிர்க்கட்சித் தலைவர் அது என்ன என்று ஒவ்வொரு மேடைகளிலும் விமர்சித்து வருகிறார். நான் தேர்தல் பிரச்சாரத்தில் கூறியது போலவே, சட்ட மன்றத்தில் நான் பேசிய முதல் கன்னிப் பேச்சில் நீட் தேர்வை எதிர்த்து போராடிய அனிதாவின் பெயரில் அரங்கம் அமைக்க வேண்டும் என்று பேசினேன். இன்று அரியலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட மருத்துவர் கல்லூரி வளாகத்தில் 22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலையரங்கத்திற்கு சகோதரி அனிதாவின் பெயர் சூட்டப்படுகிறது.  அனிதா நிறைவு அரங்கம் என்று இது அமைக்கப்படுகிறது. இதை பார்க்கும் பொழுதெல்லாம் நீட் தேர்வுக்காக நாம் போராடுவது நினைவிற்கு வரும் அண்மையில் பாரத பிரதமரை சந்தித்தபோது நான் முதலில் வைத்த கோரிக்கை நீட் தேர்வு ரத்து என்பது, அதற்கு பாரத பிரதமர் மோடி நீட் தேர்வு தேவை என்பதற்கான அவசியங்களை எடுத்துக் கூறினார். ஆனால் நான் தமிழகத்தில் மாணவர்கள் நீட் தேர்வை ஏற்கவில்லை. திமுக நீட் தேர்வு ரத்து செய்யும் வரை சட்டப் போராட்டத்தினை தொடரும் என்று கூறிவிட்டு வந்துள்ளேன்.  திமுக சார்பில் நீட் தேர்வு ரத்தாகும் வரை சட்டப் போராட்டம் தொடரும் என்பது எனது நீட் தேர்வின் ரகசியம்” என்று கூறினார்.