கரூரை சேர்ந்தவர் பிரகாஷ். இவர், தனக்கு சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர், ஆதரவாளர் பிரவீன் உள்ளிட்டோர் மிரட்டி பத்திரப் பதிவு செய்ததாக வாங்கல் போலீஸில் புகார் கொடுத்தார்.
இதேபோல, இந்த சம்பவத்தில் போலி ஆவணங்கள் கொடுத்து நிலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர், கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில், தானும் கைது செய்யப்படலாம் என்று கருதிய விஜயபாஸ்கர் தலைமறைவானார். அவரும், அவரது சகோதரர் சேகரும் 2 முறை தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்களை கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், 5 வாரங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த விஜயபாஸ்கர், அவரது ஆதரவாளர் பிரவீன் ஆகியோரை கேரள மாநிலம் திருச்சூரில் சிபிசிஐடி போலீஸார் கடந்த 16-ம் தேதி கைது செய்து கரூர் அழைத்து வந்தனர். சிபிசிஐடி அலுவலகத்தில் அவர்களிடம் 7 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பரத்குமார் முன்பு அவர்கள் இருவரும் நள்ளிரவு 12.15 மணி அளவில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் ஜூலை 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து போலீஸார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று, விஜயபாஸ்கரை திருச்சி மத்திய சிறையிலும், பிரவீனை குளித்தலை சிறையிலும் அடைத்தனர்.இந்நிலையில் இன்று திருச்சி மத்திய சிறையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சி.வி சண்முகம், திருச்சி மாவட்ட செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன் உள்ளிட்ட அதிமுகவினர் சந்தித்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசியது..
தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லை, கொலை கள்ளச்சாராயம் விற்பனை அனைத்தும் தலைதூக்கி உள்ளது அவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கட்டுப்படுத்தவில்லை.
மேலும் காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சிகளின் நிர்வாகிகள் மீது பொய் வழக்குகளை பதிவு செய்து சிறையில் அடைத்து வருகிறார்கள்.
தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கை முறைப்படி நீதிமன்றத்தில் சந்திப்போம். அதனை தொடர்ந்து எம்.ஆர். விஜயபாஸ்கர் விடுதலை செய்யப்படுவார்.
தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என தெரிவித்தார்.