திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்த மூன்று மாதத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்ற 417 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ரூபாய் 57 லட்சம் மதிப்பிலான 595 கிலோ போதை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க தமிழ்நாடு காவல்துறை கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக சட்டப்பேரவையில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த தமிழ்நாடு முதல்வர், போதை பொருட்கள் மற்றும் குட்கா விற்பனை செய்தவர்கள் மீது 10,673 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 11,247 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் 149.43 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக 15 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதேபோன்று கஞ்சா விற்பனை செய்த 3,437 பேர் கைது செய்யப்பட்டு 81 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 5,937 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் பள்ளி, கல்லூரிகள் அருகே போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் தண்டனை எடுக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு போதை பொருட்கள் விற்பனை முழுவதும் தடுக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார். இதன்படி திருச்சி மத்திய மண்டலத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க காவல்துறை பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக கஞ்சா, குட்கா விற்பனை மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கடத்தி செல்வதை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து காவல்துறையினர் எடுத்து வருகிறார்கள். மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரில் 9 மாவட்டங்களில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு போதை பொருட்களின் பயன்பாடு கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 3 மாதங்களில் மொத்தம் 595 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது இதன் மதிப்பு ரூபாய் 57 லட்சம் ஆகும்.
இது தொடர்பாக 267 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 417 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 86 வழக்குகளில் 154 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், ரூபாய் 28.83 லட்சம் மதிப்புள்ள 294 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளது. மேலும் திருச்சி மாவட்டத்தில் 22 வழக்குகளில் 30 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 24.61 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று புதுக்கோட்டை 27 வழக்குகளில் 45 பேர் கைது செய்யப்பட்டு 16.38 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, கரூரில் 40 வழக்குகளில் 47 பேர் கைது செய்யப்பட்டு 51.45 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, பெரம்பலூரில் 4 வழக்குகளில் 4 பேர்கள் கைது செய்யப்பட்டு 1.60 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, அரியலூரில் 15 வழக்குகளில் 36 பேர் கைது செய்யப்பட்டு 6.16 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய மண்டலத்தை பொருத்தவரை போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மாவட்டம் தோறும் தொடர்ந்து கண்காணிப்பில் காவல்துறையினர் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு தடையை மீறி யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.