இந்தியாவில் நீண்ட காலமாக கிரிக்கெட் மட்டுமே பிரபலமான விளையாட்டாக இருந்து வந்த நிலையில், மற்ற விளையாட்டுப் போட்டிகளிலும் ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச தளங்களில் பதக்கம் வெல்லும் திறமை வாய்ந்த வீரர்களை கண்டறிந்து பயிற்சி வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. இத்தகைய இளம் வீரர்களை கண்டறியும் நிகழ்வாகவே கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள், பல்கலைக்கழக விளையாட்டுகள் மற்றும் குளிர்கால விளையாட்டுகள் என மூன்று வடிவங்களில் 2018 முதல் நடத்தப்பட்டு வருகிறது.


தமிழ்நாட்டில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளதை முன்னிட்டு அதனை விளம்பரப்படுத்தும் வகையில்  திருச்சி கேம்பியன் பள்ளியில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி சின்னத்தை காட்சிபடுத்தி, கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பரிசுகள் வழங்கினார். இதனை தொடர்ந்து மேடையில் பேசிய மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கூறியது..  கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2018-ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு. அதன்பின்னர் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டுள்ளது. தற்சமயம் 6வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் 2024 ஜனவரி 19 முதல் 31ஆம் தேதி வரை சென்னை,திருச்சி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் சிறப்பாக நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் களரிபயட்டு மற்றும் மல்லர்கம்பம் விளையாட்டுகள் திருச்சி மாநகரிலும், கூடைப்பந்து மற்றும் தாங்-டா விளையாட்டுகள் கோயம்புத்தூர் மாநகரிலும், கட்கா மற்றும் கோ-கோ விளையாட்டுகள் மதுரை மாநகரிலும், இதரப் போட்டிகள் அனைத்தும் சென்னை மாநகரில் நடைபெறவுள்ளது.




திருச்சி மாவட்டத்தில், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் மல்லர்கம்பம் போட்டிகள் 21.01.2024 முதல் 24.01.2024 வரை மற்றும் களரிபயட்டு போட்டிகள் 27.01.2024 முதல் 29.01.2024 வரை திருச்சி  அண்ணா விளையாட்டரங்கிலுள்ள உள்விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது என தெரிவித்தார். முன்னதாக இன்று காலை தமிழ்நாட்டில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளதை முன்னிட்டு அதனை விளம்பரப்படுத்தும் வகையில் திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்த கேலோ இந்தியா பிரச்சார வாகனத்துடன் காவல்துறையினர் வாகனப் பேரணி மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பேரணி மற்றும் மாரத்தான் போட்டியை மாநகராட்சி மேயர் திரு.மு.அன்பழகன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். இந்த விழிப்புணர்வு பேரணி பிரச்சார வாகனம் அண்ணா விளையாட்டரங்கத்திலிருந்து தொடங்கி டி.வி.எஸ்.டோல்கேட், தலைமை தபால் நிலையம், ஆர்.சி மேல்நிலைப்பள்ளி, இரயில்வே ஜங்சன். மத்திய பேருந்து நிலையம் வழியாக கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்கு வந்தடைந்தது. இந்நிகழ்வுகளில், மாநகர காவல் துணை ஆணையர் திரு.செல்வக்குமார், மாவட்ட விளையாட்டுத்துறை அலுவலர் திரு.வேல்முருகன், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.