போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக கடந்த டிசம்பர் மாதம் நோட்டீஸ் வழங்கி இருந்தனர். மேலும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் அரசு சார்பில் இன்னும் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தவில்லை. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டம், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர். பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை. மேலும் தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் போராட்ட அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன்படி ஜனவரி 9 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகப் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன. அதனைத் தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் நேற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் உடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவுகள் எட்டப்படாததால் தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் திட்டமிட்டபடி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.




அதன்படி, போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கு அகவிலைப் படியை உயா்த்த வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை  உள்ளிட்ட  23 சங்கங்கள் நேற்று  காலை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் பாதிக்காத வகையில் அனைத்து பேருந்துக்களையும் இயக்க போக்குவரத்து துறை நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி நேற்று நடந்த வேலை நிறுத்த போராட்டத்தின் பொது  95 சதவீதத்திற்கு மேல் பேருந்துகள் இயங்கியதாக போக்குவரத்து துறை அறிவித்தது.    இதனிடையே இன்று இரண்டாவது நாளாக பேருந்துகள் இயங்காது எனவும் மேலும்  மறியல்  மற்றும் பணிமனை முற்றுகை  போராட்டம் நடைபெறும் எனவும் தொழில் சங்கத்தினர் அறிவித்தனர். இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் உள்ள தொழில்  சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.   அதே போல திருச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு தொழில் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேருந்து நிலையத்தில் இருந்து வரும் பேருந்துகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மத்திய பேருந்து நிலையம்  பரபரப்பாக காணப்பட்டது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.