தமிழ்நாட்டில் கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில், மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது அறிவிப்பின் மூலம் செயல் வடிவமாக உயிர் கொடுத்தார். முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரையின் பிறந்தநாள் அன்று இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் நோக்கில் தமிழகம் முழுவதும் சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தகுதியானவர்கள் என தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரசு சார்பில் இந்தத் திட்டத்துக்கான தகுதி குறித்த விவரம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கும் பணியை அரசு தொடங்கியுள்ளது. பாரதியார், பாரதிதாசன் போன்ற தமிழ் அறிஞர்கள் மகளிர் முன்னேற்றம் குறித்த கருத்தை உரத்த குரலில் பேசியவர்கள். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் சி.என்.அண்ணாதுரை, கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரும் மகளிர் முன்னேற்றம் சார்ந்து முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை தங்கள் ஆட்சி காலங்களில் செயல்படுத்தி உள்ளனர். அந்த வரிசையில் முதல்வர் ஸ்டாலின் இணைந்துள்ளார். நிச்சயம் விளிம்பு நிலையில் வாழ்ந்து வரும் மகளிருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாயை உறுதி செய்யும் இந்தத் திட்டம் மகிழ்ச்சியை மலர செய்யும் என முதல்வர் ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் சிவபுரத்தில் உள்ள ஜெ.ஜெ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும், திருவரங்குளம் அம்பாள் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை தொடங்கி வைத்து, அத்திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1,000 பணம் எடுக்கும் ஏ.டி.எம். அட்டைகளை தகுதியான குடும்ப தலைவிகளுக்கு வழங்கினர். அப்போது மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா உடனிருந்தார். இதையடுத்து, திருமயம் தாலுகாவில் 3,391 மகளிருக்கும், ஆலங்குடி தாலுகாவில் 4,431 மகளிருக்கும் என மொத்தம் 7,822 பயனாளிகளுக்கு ஏ.டி.எம். கார்டுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிகளில் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் இத்திட்டத்தில் பயனாளிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் ரூ.1,000 நேற்று முன்தினம் வரவு வைக்கப்பட்டன. இத்திட்டத்தில் மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை விவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது அதுபற்றிய விவரம் தங்களுக்கு வரவில்லை என்றனர்.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தால் பயன்பெறும் மகளிர் கருத்து :
குடும்பத்தலைவி காஞ்சனா : பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்தியாவில் இதுவரை எந்த மாநிலத்திலும் இத்தகைய திட்டம் அமல்படுத்தப்பட்டது இல்லை. மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னோடியாக இந்த திட்டம் உள்ளது. இந்த திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து இருந்தார். ஆனால் ஒரு நாள் முன்பே பணம் வந்தது மிக்க மகிழ்ச்சி. எங்கள் பகுதியில் உள்ள கட்டிட தொழிலாளர்கள், வீட்டுவேலை பார்ப்பவர்கள், துப்புரவு தொழிலாளர்கள் என்று பல குடும்ப தலைவிகளுக்கு இந்த உதவித்தொகை மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்றார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலி அவர்களுக்கு நன்றிகள் தெரிவித்தனர்.