திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி நிறுவனங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் திராவிடர் கழக தலைவர் வீரமணி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வீரமணி பொங்கல் கூட்டினார். தொடர்ந்து அங்கு நடந்த பல்வேறு கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வீரமணி....
அனைவருக்கும் திராவிடர் திருநாளான பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். ராமர் கோவில் திறப்பு விழாவில் இந்தியா கூட்டணியை சேர்ந்த பெரும்பாலான கட்சிகள் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்திருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். பக்தி என்பது அவரவர் தனிச்சொத்து. ஆனால் பா.ஜ.கவினர் அதை அரசியலுக்கு பயன்படுத்துகிறார்கள். கட்டி முடிக்கப்படாத ராமர் கோவிலை பிரதிஷ்டை செய்ய கூடாது என நான்கு சங்கராச்சாரியார்களே கூறியுள்ளார்கள். இந்து மத விவகாரங்கள் தொடர்பாக சங்கராச்சாரியார்கள் தான் கருத்து கூற முடியுமே தவிர பாஜகவினர் கருத்து கூற முடியாது.
பாஜகவை எதிர்ப்பவர்கள் சனாதான விரோதிகள், இந்து மத விரோதிகள் என கூறும் பாஜகவினர் தற்பொழுது சங்கராச்சாரியார்களை பார்த்து அவ்வாறு கூறுவார்களா? முடிந்தால் பா.ஜ.கவினர் சங்கராச்சாரியார்களை இந்து மத விரோதி என கூறட்டும் இல்லையென்றால் அவ்வாறு மற்றவர்களை கூறுவதை அவர்கள் நிறுத்த வேண்டும். தேர்தல் வரக்கூடிய சூழலில் தற்பொழுது பாஜகவினர் ராமனையே வேட்பாளராக நிறுத்துகிறார்கள். ராமன் ஒருபோதும் வேட்பாளராக கூடாது.
ஓ.பன்னீர்செல்வம் எதில் ஏற வேண்டும் என தெரியாமல் இருந்தார். தற்பொழுது கதவு அவருக்காக கொஞ்சம் திறக்கப்பட்டுள்ளது. அதனால் இந்தியா கூட்டணியை அவர் விமர்சிக்கிறார். ஓபிஎஸ், எடப்பாடி சிறைக்கு போவார் என்கிறார், எடப்பாடி, ஓ.பி.எஸ் சிறைக்கு செல்வார் என்கிறார். இதன்மூலம் அவர்கள் இருவரும் கோட்டைக்கு போக மாட்டோம் என்பதை ஒப்புக் கொண்டு விட்டார்கள். பாஜகவை புகழ்ந்தால் அந்த கூட்டணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்து இந்தியா கூட்டணியை ஆண்டிகளின் மடம் என ஓ.பி.எஸ் கூறுகிறார். ஆண்டிகளக்காவது மடம் இருக்கிறது ஆனால் ஓபிஎஸ்க்கு எந்த இடமும் இல்லாததால் அவர் இடம் தேடி வருகிறார்.
தன் அமைச்சரவையில் யாருக்கு என்ன தகுதி இருக்கிறது? என்ன பொறுப்பு கொடுக்க வேண்டும் என முடிவு செய்ய வேண்டியது முதலமைச்சர் தான். அடக்கமாகவும் சிறப்பாகவும் செய்து வரும் உதயநிதி எல்லா பொறுப்புக்கும் தகுதி உடையவராக இருக்கிறார் என்றார்.