அரியலூர் மாவட்ட , சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் திருமானூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான கடத்தல் மற்றும் வணிக ரீதியான பாலியல் சுரண்டல் குறித்த சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான மகாலெட்சுமி தலைமை தாங்கி பேசினார்.

 

அப்போது அவர் பேசியதாவது:- “மக்கள் தங்களது பிரச்சினைகளுக்கு தயங்காமல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தை நேரில் அணுகினால் இருதரப்பினரையும் நேரில் அழைத்து விசாரித்து சுமூக தீர்வு காண்பதற்கு ஏற்பாடு செய்து தரப்படும். மக்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமை பறிபோகக்கூடாது. படிப்பறிவு இல்லை என்பதற்காகவும், ஏழை என்பதற்காகவும், எழுத்தறிவு இல்லை என்பதற்காகவும் நீதி மறுக்கப்படக்கூடாது. நீதிமன்றத்தையும், காவல்துறையையும் மக்கள் ஒதுக்கி வைக்கிறார்கள். ஒரு வழக்கு முடிவதற்கு குறைந்தபட்சம் 5 வருட காலம் நீடிப்பதாலும் மக்கள் மிகவும் விரக்தியாகிறார்கள். பல நாட்கள் கழித்துதான் தீர்ப்பு கிடைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மைதான். சட்டம் ஒரு நியதிக்கு உட்பட்டுதான் இயங்கும். இது நடைமுறை சிக்கல்கள், காலதாமதம் போன்ற இடர்பாடுகளினால் ஏற்படுகிறது. இதனால் மக்களுக்கு விரக்தி ஏற்பாடாமல் இருக்க வேண்டும் என்பதன் பொருட்டு மாவட்ட வாரியாக தீர்வு காண்பதற்கு மாற்றுமுறை தீர்வாக சட்டப்பணிகள் ஆணைக்குழு ஒரு அங்கமாக நியமிக்கப்பட்டது.

 



 

மேலும் எல்லா பிரச்சினைகளையும் நீதிமன்றங்கள் போன்றே எடுத்துக்கொள்ளும். முக்கியமாக குற்றவியல் வழக்கு, கொலை வழக்கு, குடும்ப வழக்கு, அடிதடி வழக்கு மற்றும் கணவன், மனைவி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், சொத்து பிரச்சினைகள், விபத்து வழக்குள் குறித்து தீர்வு காண சுமூகமாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகலாம். மக்கள் நேராக வந்து தங்களது பிரச்சினையை கூறினால் போதும். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் மிக விரைவில், 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். மேலும் மக்கள் பயனடையும் வகையில் ஒவ்வொரு தாலுகாவிலும் சட்டப்பணிகள் குழு இயங்குகிறது” என தெரிவித்தார்.

 

மேலும் இம்முகாமிற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் அழகேசன் முன்னிலை வகித்தார். திருமானூர் ஊராட்சி தலைவர் உத்திராபதி வரவேற்றார். ஊராட்சி மன்ற துணை தலைவர் மணிமாறன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். திருமானூர் இன்ஸ்பெக்டர் சகாயம் அன்பரசு, வழக்கறிஞர் சங்க தலைவர் மனோகரன், அட்வகேட்ஸ் அசோசியேஷன் தலைவர் செல்வராஜ் மற்றும் அரசு வக்கீல் தேவேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண