திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா காட்டுப்புத்தூர் பேரூராட்சி 8-வது வார்டு மேலமஞ்சமேடு கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 25 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். ஒரு தலைமையாசிரியரும், ஒரு உதவி ஆசிரியரும் பணியாற்றுகின்றனர். இந்த பள்ளி கட்டிடம் பழுது அடைந்து இருந்ததால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தனியார் வீட்டை வாடகைக்கு எடுத்து அந்த கட்டிடத்தில் பள்ளி செயல்பட்டு வந்தது. மேலும் அந்த வீட்டுக்கு 25 மாணவ-மாணவிகளிடமும் மாதத்திற்கு தலா ரூ.200 வசூலித்து வாடகை கொடுக்கப்பட்டது. சுமார் 8 மாதங்களாக வாடகை செலுத்தினர். எனவே பள்ளிக்கு விரைவில் கட்டிடம் கட்டித்தர வலியுறுத்தி காட்டுப்புத்தூர் பஸ் நிலையம் முன்பு மாணவ-மாணவிகளும், அவர்களது பெற்றோர்களும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 



 

மேலும் இதுகுறித்து மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் கூறும்போது, “நாங்கள் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறோம். பள்ளிக்கு கட்டிடம் இல்லாததால் தனியார் கட்டிடத்தில் பள்ளி இயங்குகிறது. இதற்கான கட்டணத்தை நாங்கள் செலுத்தி வருகிறோம். கூலி வேலை செய்து வரும் எங்களுக்கு வருமானம் இல்லாததால் வாடகை செலுத்த முடியவில்லை. எனவே அரசு உடனடியாக பள்ளி கட்டிடம் கட்டித்தர வேண்டும். இல்லையென்றால் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம்” என்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த காட்டுப்புத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும், ஒரு மாத காலத்திற்குள் பள்ளிக்கு நிரந்தர கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதனையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பெற்றோர்கள் கூறியது.. நாங்கள் சரியாக படிக்கவில்லை, ஆகையால் தான் தின கூலி வேலைக்கு செல்கிறோம். அதனால் எங்கள் குழந்தைகள் பள்ளிக்கு சென்று நன்கு படித்தால் வாழ்கையில் முனேற்றமும், நல்ல வேலைக்கு செல்வார்கள் என நினைத்து தான் படிக்கவைக்கிறோம். மேலும் எங்களுக்கு வசதிகள் இருந்தால் தனியார் பள்ளியில் படிக்க வைத்து இருப்போம், ஆனால் ஏழையாக உள்ள எங்களால் அரசு பள்ளியில் தான் படிக்கவைக்க முடியும். ஆனால் அரசு பள்ளியில் குழந்தைகள் படிக்க கட்டிடம் இல்லதால் என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கிநிற்கிறோம் என்றனர். 

 








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண