திருச்சி கனரா வங்கியின் மண்டல துணை பொதுமேலாளர் கிருஷ்ணமூர்த்தி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்டம் துறையூரில் செயல்பட்டு வந்த கனரா வங்கி கிளையில் துறையூர் குட்டக்கரையை சேர்ந்த முகேஷ் (வயது 38) என்பவர் ஒப்பந்த அடிப்படையில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்தார். இவர் தங்க நகைகள் மீது கடன் வாங்க வரும் வாடிக்கையாளர்களின் நகைகளை மதிப்பீடு செய்து, அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதிகாரிகளிடம் கொடுப்பது வழக்கம். இந்தநிலையில் நகை மதிப்பீட்டாளர் முகேஷ் கடந்த ஜூலை மாதம் முதல் நவம்பர் மாதம் வரை சில வாடிக்கையாளர்களிடம் தொடர்பு கொண்டு தன்னிடம் உள்ள நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்று தரும்படி கூறி உள்ளார். இதனை ஏற்று, வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்களிடம் மோசடியாக 2 விண்ணப்பங்களில் கையொப்பம் பெற்றுள்ளார். அதில் ஒரு விண்ணப்பத்தில் தங்க நகைகள் மற்றும் ரொக்கத்தின் சரியான அளவீட்டை குறித்து உள்ளார். மற்றொரு விண்ணப்பத்தில் அதிக எடை மற்றும் அதிக ரொக்கத்தை குறித்து உள்ளார்.
இதனை தொடர்ந்து விண்ணப்பத்தை சரிபார்த்து வாடிக்கையாளர்களின் கணக்கில் கடன்தொகையை வரவு வைக்க மற்றொரு அலுவலரிடம் விண்ணப்பம் அனுப்பப்பட்டபோது, ஏற்கனவே நகை எடையையும், கடன்தொகையையும் அதிகமாக குறித்து வைத்து இருந்த விண்ணப்பதை மாற்றி கொடுத்து கூடுதலாக கடன்தொகையை கணக்கில் வரவு வைக்க வைத்துள்ளார். மேலும், நகை அடமானம் வைத்த ஒரு வருடத்துக்குள் வாடிக்கையாளர்கள் நகையை திருப்பி கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் ஒருவருட வட்டித்தொகையை செலுத்தி மறுஅடகு வைக்க வேண்டும். மறு அடகு என்பது பழைய கணக்கை முடித்துவிட்டு புதிய நகைக்கடன் கணக்கை தொடங்க வேண்டும். அவ்வாறு மறுஅடகு வைக்க வந்த சில வாடிக்கையாளர்களிடம் முகேஷ் பழைய கணக்கை முடிக்காமல் புதிய நகைக்கடனை தொடங்கியுள்ளார். இதன் மூலம் அவர் மோசடியாக பணத்தை பெற்று வங்கிக்கு ரூ.41 லட்சத்து 22 ஆயிரம் இழப்பு ஏற்படுத்தி இருந்தது தணிக்கையில் தெரியவந்தது. ஆகவே நகை மதிப்பீட்டாளர் முகேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தார். இந்த புகாரின்பேரில், திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் வழக்குப்பதிவு செய்து, முகேஷை கைது செய்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்