ஜம்புத்தீவு பிரகடனம் என்றால் என்ன?


18-ம் நூற்றாண்டில் கர்நாடக நவாப் ஆக இருந்த முகம்மது அலி-க்கும் அவரது சகோதரியை மணந்த சாந்தா ஷாகிப் என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, முகம்மது அலி ஆங்கிலேயர்களின் ஆதரவை நாடினார். சாந்தா ஷாகிப் பிரான்ஸ்-ன் ஆதரவை நாடினார். இந்தப் போரில் முகம்மது அலி வெற்றி பெற்றதை அடுத்து, அவர் ஆற்காடு கோட்டையையும், திருச்சி கோட்டையையும் கைப்பற்றுகிறார். போரில் வெற்றி பெற உதவிய ஆங்கிலேயர்களுக்கு அதாவது வங்கத்தில் ஆளுநராக இருந்த ராபர்ட் கிளைவுக்கு, பாளையங்களிடம் வரி வசூலிக்கும் உரிமையை தானமளித்தார் முகம்மது அலி. இதையடுத்து ஆங்கிலேயர்கள் வரி வசூலில் ஈடுபடத் தொடங்கினர். இதனை எதிர்த்த மருதுபாண்டியர்கள், ஆங்கிலேயர்களை நாட்டில் இருந்து விரட்ட திட்டமிட்டனர். இதற்காக 1801-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ம் தேதி அவர்கள் வெளியிட்ட பிரகடனமே ஜம்புத்தீவு பிரகடனம். சின்னமருது பெயரால் திருச்சி, ஸ்ரீரங்கம் கோட்டை, கோவில்களில் ஒட்டப்பட்ட அந்தப் பிரகடனம் "ஜம்புத்தீவு" பிரகடனம் என்று அழைக்கப்பட்டது.





ஆங்கிலேயர்களுக்கு எதிரான முதல் போர் தொடக்கம்




‘ஜம்பு தீபகற்பத்திலுள்ள ஜம்புத் தீவில் வாழும் அந்தணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், முசல்மான்கள் முதலான அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால், நவாப் முகமது அலி, முட்டாள்தனமாக ஐரோப்பியர்களுக்கு இடங்கொடுத்து விட்டதன் காரணமாக இப்போது அவர் ஒரு விதவைபோல் ஆகிவிட்டார். ஐரோப்பியர்களோ தங்களுடைய வாக்குறுதிகளை மீறி அரசாங்கத்தையே தங்களுடையதாக ஆக்கிக் கொண்டு நாட்டு மக்கள் அனைவரையும் நாய்களாகக் கருதி ஆட்சியதிகாரம் செய்து வருகிறார்கள். உங்களிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால் ஐரோப்பியரின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளாமல், ஒருவரையொருவர் பழிதூற்றிக் கொண்டு, நாட்டை அந்நியரிடம் ஒப்படைத்து விட்டீர்கள். இந்த ஈனர்கள் ஆளும் பகுதிகளிலெல்லாம், மக்கள் ஏழ்மையில் உழல்கிறார்கள்; சோற்றுக்குப் பதில் நீராகாரம்தான் உணவு என்று ஆகிவிட்டது. துன்பப்படுவது தெரிந்திருந்தும் எதனால் இத்துன்பங்கள் ஏற்பட்டன என்பதைப் பகுத்தாராயவும் புரிந்துகொள்ளவும் இயலாத நிலையில் மக்கள் இருக்கின்றனர். ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் மனிதன் கடைசியில் செத்துத்தான் ஆகவேண்டும். ஆதலால் ஜம்புத்தீவு வாசிகள் ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டு ஒன்றுபட வேண்டும். இந்த ஈனர்களின் பெயர்கள்கூட நாட்டில் மிஞ்சியிருக்காமல் செய்யவேண்டும். அப்போதுதான் ஏழைகளும் இல்லாக் கொடுமையால் அல்லல்படுவோரும் வாழ முடியும்.


இந்த ஈனர்களுக்கு தொண்டூழியம் செய்து சுகவாழ்வு வாழ விரும்புகிறவன் எவனாவது இருந்தால் அவர்கள் ஒழிக்கப்பட வேண்டும். ஆதலால், மீசை வைத்த அனைவரும் உங்களுக்கு வீரமிருந்தால், இந்த ஈனர்களை அழித்து விடவேண்டும். இந்த ஈனர்களுக்கு தொண்டூழியம் செய்கிறவனுக்கு இறந்தபின் மோட்சம் கிடையாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன். எனவே, உடம்பில் ஐரோப்பியனின் ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள் என மருதுபாண்டிசகோதர்கள் ஆங்கிலோர்களுக்கு எதிராக  முதல் போர் முழக்கத்தை வெளியிட்டனர். 




மருதுபாண்டியர்களுக்கு ஜம்புதீவு பிரகடம் நினைவு சின்னம் அமைக்கவேண்டும்


இந்திய சுதந்திரப் போர் என வரலாற்றில் குறிப்பிடப்படும் சிப்பாய் கலகத்துக்கு (1857ஆம் ஆண்டுக்கு) முன்பாகவே தமிழகத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் மருதுபாண்டியர்களின் போராட்டம் குறிப்பிடத்தக்கது.1801-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி ஆங்கிலேயர்களுக்கு எதிராக சாதி, மத, பேதமின்றி அனைத்து மக்களையும், சிற்றரசர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் இந்தியத் துணைக்கண்டம் முழுவதற்கும் விடுதலை வேண்டி திருச்சி மலைக்கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் கோயில் சுவர்களில் எழுத்துபூர்வமாக ஜம்புத்தீவு பிரகடன் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க போர் பிரகடனத்தை வெளியிட்டனர். இந்தப் பிரகடனம் ஆங்கிலேயரிடத்தில் ஏற்படுத்திய அச்சத்தின் விளைவாகவே அதே ஆண்டில் அக்.24-ம் தேதி மருது சகோதரர்களையும், அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோரையும் தூக்கிலிட்டனர்.ஜம்புத்தீவு பிரகடனம் வெளியிட்ட மருதுபாண்டியர்களுக்கு உரிய மரியாதை செலுத்தும் வகையிலும், அடுத்து வரக்கூடிய இளம் தலைமுறையினர் இந்த வரலாற்றை அறிந்துகொள்ளும் வகையிலும் திருச்சி மலைக்கோட்டை அல்லது ஸ்ரீரங்கத்தில் ஜம்புத்தீவு பிரகடனம் தொடர்பாக ஒரு நினைவுச் சின்னம் அமைத்துத் தர வேண்டும் என பலதரப்பட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.