திருச்சி மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றாலும் எல்லாவற்றிக்கும் முதன்மையாக பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு  போட்டி தான். கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது திருச்சி திருவெறும்பூர், பெரிய சூரியூரில் நேற்று நடைபெற்றது.


திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு:


இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 658 காளைகளும் , சுமாத் 400 வீரர்களும் கலந்து கொண்டனர். காலை 8 மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். பின்பு  திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்தார். முன்னதாக கால்நடை இணை இயக்குனர் மும்மூர்த்தியின் தலைமையிலான கால்நடை மருத்துவ குழுவினர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு போதை மருந்து கொடுக்கப்பட்டுள்ளதா? ஜல்லிக்கட்டு போட்டிக்கு கலந்து கொள்வதற்கு உரிய தகுதி உள்ளதா? என்பதை மருத்துவ ஆய்வு என்கின்றனர். அதன் பிறகு ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் கலந்து கொள்ள அனுமதிக்கபட்டது. 


அதேபோல் திருவெறும்பூர் வட்டார மருத்துவ அலுவலர் பார்த்தசாரதி தலைமையிலான மருத்துவ குழுவினர், ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் போதை பொருட்கள் உட்கொண்டு உள்ளார்களா உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளையும் முழுமையாக செய்த பிறகு வீரர்களை போட்டியில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. 




ஜல்லிகட்டு போட்டி தொடங்கிய முதல் சுற்றில் இருந்து  காளைகள் ஒவ்வொன்றும் சீறிப்பாய்ந்தன. ஒரு சில காளைகள் களத்தில் எவராலும் தொட முடியாத அளவிற்கு விளையாடி பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தியது. ஜல்லிக்கட்டு போட்டியில் ஒவ்வொரு சுற்றுக்கும் சுழற்சி முறையில் வீரர்கள் களம் இறங்கினர். தொடக்க முதல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.


மொத்தம் 6 சுற்றுகளாக நடைபெற்ற போட்டியின்  இறுதியில், நாமக்கல் மாவட்டம், கே.டி.எம்.கார்த்திக் என்ற இளைஞர்,  15 காளைகளை அடக்கிய முதல் பரிசை வென்றார். அதுமட்டும் அல்லாமல் சிறந்த மாடுபிடி வீரர் என்ற பட்டத்தையும் தட்டிச்சென்றார். மேலும், இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவருக்கு சிறப்பு விருந்தினர்கள்  இருசக்கர வாகனத்தின் சாவியை   வழங்கினார். இது தவிர அவ்வப்போது மாடுகளை அடக்கும் வீரர்களுக்கும், திறமையாக விளையாடிய மாட்டிற்கும் வெள்ளி காசு, தங்க மோதிரம், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பரிசுகளாக வழங்கப்பட்டது.




73 பேருக்கு காயம்:


மேலும் இந்த போட்டியில் மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 73 பேர் காயமடைந்தனர். அதில் 13 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இந்த போட்டிக்காக திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையில் சுமார் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


மேலும்,  இந்த ஜல்லிக்கட்டு போட்டியை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இலங்கை கிழக்கு ஆளுநர் செந்தில்தொண்டமான்,  உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டு, வீரர்களை உற்சாகம் ஊட்டும் வகையில் மின் விசிரி, மோதிரம், குத்து விளக்கு போன்ற உடனடி பரிசுகளை வழங்கினர். 


இந்த ஜல்லிக்கட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு களித்தனர்.