திருச்சி : திமுக கவுன்சிலர் மீது சுயேச்சை வேட்பாளர் வழக்கு..
திருச்சி மாநகராட்சி தேர்தலில் 56-வது வார்டில் திமுக வேட்பாளர் மஞ்சுளா தேவி கள்ள ஓட்டுபோட்டுதான் வெற்றி பெற்றார்.
Continues below advertisement

திருச்சி_மாநகராட்சி_திமுக_கவுன்சிலர்_மஞ்சுளா_தேவி_மீது_வழக்கு
திருச்சி மாநகராட்சி தேர்தல் கடந்த மாதம் 19-ஆம் தேதி நடந்தது. இதில் 56-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க. சார்பில் கருமண்டபம் மாந்தோப்பு பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி மஞ்சுளாதேவி போட்டியிட்டார். மேலும் அ.தி.மு.க. சார்பில் ராஜலட்சுமி, பா.ஜனதா சார்பில் சத்யகலா, தே.மு.தி.க. சார்பில் சர்மிளா, நாம் தமிழர் கட்சி சார்பில் பாண்டிமீனா, த.ம.மு.க. சார்பில் சவுந்தர்யா மற்றும் சுயேச்சையாக கவிதா பெருமாள், யோகலட்சுமி ஆகியோர் போட்டியிட்டனர். இதனை தொடர்ந்து வாக்குப்பதிவு நாளன்று தி.மு.க. வேட்பாளர் மஞ்சுளாதேவி 2 ஓட்டுகளை வெவ்வேறு வாக்குச்சாவடிகளில் தனது பெயரில் பதிவு செய்ததாக கூறி, அவருக்கு எதிராக இதர வேட்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் முடிவில் தி.மு.க. வேட்பாளர் மஞ்சுளாதேவி 4 ஆயிரத்து 323 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் அதைத்தொடர்ந்து கடந்த 2-ந் தேதி கவுன்சிலராகவும் அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்த நிலையில் 56-வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட கருமண்டபம் ஆர்.எம்.எஸ்.காலனியை சேர்ந்த கவிதா பெருமாள், தி.மு.க. கவுன்சிலர் மஞ்சுளாதேவியை தகுதி நீக்கம் செய்யக்கோரி வழக்கறிஞர் அசோக்குமார் மூலம் திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் அவர் கூறியுள்ளது.
கடந்த மாதம் 19-ஆம் தேதி நடைபெற்று முடிந்த தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி கோ-அபிஷேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட 56-வது வார்டில் நான் தீப்பெட்டி சின்னத்தில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டேன். அதே வார்டில் தி.மு.க வேட்பாளராக மஞ்சுளா தேவி என்பவர் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். வாக்குப்பதிவின் போது தி.மு.க. வேட்பாளர் 56-வது வார்டுக்கு உட்பட்ட கருமண்டபம் ஆரம்பப்பள்ளி வாக்குச்சாவடி பாகம் எண்: 646 மற்றும் 647 ஆகிய 2 வாக்குச்சாவடிகளிலும் கள்ள ஓட்டுகள் போட்டதோடு மட்டுமல்லாமல் 56-வது வார்டுக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அவரது ஆதரவாளர்களால் கள்ள ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டு மஞ்சுளா தேவி வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
தேர்தலில் போட்டியிட்ட நான் 2,439 வாக்குகள் பெற்று 2-ம் இடம் பிடித்துள்ளேன். மஞ்சுளா தேவி கள்ள ஓட்டு போட்டதால் அவர் வகிக்கும் கவுன்சிலர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும், அவருடைய வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும். மேலும் 2-ம் இடம் பிடித்துள்ள என்னை வெற்றி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் பதிவாகி உள்ளது. எனவே, விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வழக்கில் எதிர் மனுதாரராக கோ-அபிஷேகபுரம் கோட்ட தேர்தல் நடத்தும் உதவி அலுவலர், மாநகராட்சி தேர்தல் அலுவலர் மற்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.