தென்கிழக்கு வங்க கடல் வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 11ஆம் தேதி காலை தமிழக கரையை நெருங்ககூடும். இதன் காரணமாக  டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம்  மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர், மதுரை, சிவகங்கை, மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும்,   சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, விழுப்புரம், விருதுநகர் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும்,  ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




கடந்த இரண்டு நாட்களாக பெய்த தொடர்கன மழையால் திருச்சி மாவட்டம்  உறையூர் லிங்கா நகர் அருகே உய்யகொண்டான் வாய்காலில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்புகளில் புகுந்த வெள்ளநீர் மிகுந்த அச்சத்தில் மக்கள் உள்ளனர். மேலும் திருச்சி உறையூர் அருகே உய்யகொண்டான் வாய்க்காலில் லேசான உடைப்பு ஏற்பட்டது. இதனால் குழுமினி சாலையில் உள்ள லிங்கா நகர்,மகாலெட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 500க்கும் அதிகமான வீடுகள் நீரில் மூழ்கின. தொடர்ந்து மழை பெய்வதால்  வாய்க்காலில் இருந்து வெளியேறும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரிப்பதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள்  அச்சத்தில் உள்ளனர்.மேலும் உய்யக்கொண்டான் வாய்க்கால் மற்றும் வயல்வெளிகள் அதிகம் உள்ள பகுதிகளில் வீடுகளை கட்டி குடியேறியதால் இது போன்ற மழை காலங்களில் அங்குள்ள பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள் மழைக்காலம் முடிந்த பிறகு ஆக்கிரமிப்புக்களை அகற்றும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபடும் எனவும், ஆக்கிரமிப்புக்களை முற்றிலுமாக அகற்றினால் மீண்டும் இது போன்று நிலை மக்களுக்கு வராது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.




தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அருகில் உள்ள ஏரிகள், குளங்கள், என அனைத்து நீர்நிலைகளும் முழு கொள்ளளவை எட்டி வருகிறது. ஏற்கனவே வீட்டிற்குள் அதிகளவில் நீர் புகுந்ததால் மக்கள் உறக்கம், உணவு, இல்லாமல் தவித்து வருகிறார்கள். மேலும் கனமழை பெய்யகூடும் என தெரிவிக்கபட்டுள்ளது, ஆகையால்  மாநகராட்சி உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து வெள்ள நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.மேலும் நேற்று இரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இந்த பகுதியில் மக்கள் அச்சமான சூழ்நிலையில் வசித்து வருகிறார்கள். குறிப்பாக அத்தியாவசிய தேவை கூட வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத  சூழ்நிலையில் தான் மக்கள் இருக்கிறோம். மேலும்  வெள்ள நீரில் கழிவு நீரும் கலந்து வருவதால் துர்நாற்றமும் தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதால் திருச்சி மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உனடியாக நடைவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார்.  திருச்சி மாநாகராட்சி அதிகாரிகள் மற்றும்  தீயணைப்பு வீரர்கள் நீரில் தவிக்கும் மக்களை மீட்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.