திருச்சி மத்திய மண்டலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  மத்திய மண்டலத்தில் குற்றங்களை குறைக்கும் வகையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுடன் இணைந்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருவதாக மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக கடந்த மாதம் 17ம் தேதி நடைபெற்ற உள்துறை ஆய்வு கூட்டத்தில் பொது இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதை கடமையாக கொண்டு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.


மேலும் குற்றங்கள், நடக்காத வகையிலான சூழ்நிலையை உருவாக்கும் துறையாக காவல்துறை செயல்பட வேண்டும் என்றும் பெண்கள்,குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார். இதன்படி தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.




குறிப்பாக திருச்சி மத்திய மண்டலத்தில் பொதுமக்களுடன் இணைந்து பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருச்சி மத்திய மண்டலத்தில் 2019-ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை (75) வரதட்சணை கொடுமையால் இறந்தவர்கள் 5 , வரதட்சனை கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள், 60 , பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், 826, பெண்களை துன்புறுத்துதல், 171 ஆக மொத்தம் 1137 பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவாகி உள்ளது. 2020ம் ஆண்டில் பாலியல் வன்கொடுமை ,69 , வரதட்சணை கொடுமையால் இறந்தவர்கள் 6 , வரதட்சனை கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள், 85 , பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், 1098, பெண்களை துன்புறுத்துதல், 271 ஆக மொத்தம் 1529 குற்றங்கள் பதிவாகி உள்ளது. 2021ம் ஆண்டு கடந்த ஜூன் மாதம் வரை  பாலியல் வன்கொடுமை ,41 , வரதட்சணை கொடுமையால் இறந்தவர்கள் 2 , வரதட்சனை கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள், 34 , பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், 476, பெண்களை துன்புறுத்துதல், 115 ஆக மொத்தம் 668 குற்றங்கள் பதிவாகியுள்ளன.




இந்நிலையில் மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்க செயல்படுத்தபடவுள்ள திட்டங்கள் தொடர்பாக மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்தார். மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் செயல்பட்டுவரும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பெண்களுக்கான உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் குடும்ப பிரச்சனை தொடர்பான வரும் தம்பதிகளுக்கு ஆலோசனை வழங்கி அதற்கு தீர்வு காணப்படுகிறது. தீர்வு காணப்பட்டு பிறகும் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் வராமல் இருக்கும் வகையில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.




மிகவும் முக்கியமாக மத்திய மண்டலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் எவ்வளவு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பான விரிவான ஆய்வு செய்யப்பட்டது. இதன்படி 30 ஆயிரம் வழக்குகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வின் அடிப்படையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த இடங்களில் ஒவ்வொரு அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கும் 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் குற்றங்களை குறைக்க அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் பொதுமக்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. குற்றம் அதிகம் பதிவாகி உள்ளது இடங்களில் இந்த குற்றங்கள் தொடர்பாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இந்த நடவடிக்கை மூலம் காவல் துறையினர் மக்களுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர். எனவே குற்றங்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் மூலம் படிப்படியாக குற்றங்கள் குறையும், என திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.