விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல். திருமாவளவன் 60-வது பிறந்தநாள் மணி விழாவையொட்டி கட்சியின் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை சார்பில் மாமனிதருக்கு மணி விழா திருச்சியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.


இவ்விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன்,  திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுகரசர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.


இதனைத்தொடர்ந்து மேடையில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேசியதாவது, "இன்றைக்கு நாடு ஒரு பேராபத்தில் சூழ்ந்துள்ளது. இந்த தேசத்திற்கு மிகப்பெரும் ஆபத்து மத வெறியர்களால் உண்டாகி இருக்கிறது. அவர்கள் மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தால்  எந்த எல்லைக்கும் போவார்கள். இந்த தேசம் மதம் சார்ந்த தேசமாக இருக்க வேண்டும், இந்த தேசத்திற்கு இந்து ராஷ்ட்ரம் என பெயர் சூட்ட வேண்டும் என்பது தான் அவர்களின் இறுதி இலக்கு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.




சமூகநீதி:


மக்கள் மதம் சார்ந்தவராக இருக்கலாம், ஆனால் அரசு எந்த மதத்தையும் சார்ந்தவர்களாக இருக்கக் கூடாது என்பதுதான் மதசார்பின்மை. மத சார்பற்ற நாடாக இருந்தால் தான் நீதி நிலைநாட்டப்படும். பாஜகயை எதிர்க்க வேண்டிய பொறுப்பு காங்கிரசுக்கு மட்டும் தான் இருக்கிறது என்றில்லை. ஆர்எஸ்எஸ் வலிமை பெற்றால் சனாதனம் வலிமை பெறும், சமூகநீதி குழி தோண்டி புதைக்கப்படும். பா.ஜ.க. என்பது சராசரி அரசியல் இயக்கமில்லை, ஆர்.எஸ்.எஸ்.யின் அரசியல் இயக்கம்.


இன்றைக்கு மொழி ,வழி தேசியம் எல்லா மாநிலங்களிலும் வளர்ந்து வருகிறது. ஆனால் பாஜக வளர்த்தெடுப்பது மதவழி தேசியம் ஆகும்.  இந்து மக்களின் கடவுள் நம்பிக்கையை பாஜக  அவர்களின் அரசியல் வேட்கைக்காக பயன்படுத்திக் கொள்கிறு . காங்கிரஸ் , பாஜக தேர்தல் போர் என்று எண்ணாமல் ஒட்டுமொத்த தேசத்தை காப்பதற்கு பாஜகவை எதிர்க்கிறோம் என்ற பார்வை நமக்கு வேண்டும்.  பாஜக தூண்டுகிற இந்து உணர்வுக்கு தலித்துக்களும், இறையாகிறார்கள் என்பது தான் அதிர்ச்சிக்குரியது. தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற வேண்டும் என்பதற்காக தலித் வாக்குகளை சிதறடிக்க வேண்டும் என்பது தான் அவர்களின் யுக்தி.




தாக்குப்பிடித்து நிற்பதே பெரிது:


தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகளை, பா.ஜ.க.வால் ஒருபோதும் சீண்ட முடியாது. அரசியலில் தனித்து நிற்பதை விட தாக்கு பிடித்து நிற்பது தான் பெரிது. தேர்தல் களத்தில் ஒவ்வொரு கட்சியும், தனக்கான வாக்கு வாங்கியை நிரூபித்துக் காட்டி தான் கூட்டணியில் இடம் பெற்றார்கள். ஆனால்  தனித்து போட்டியிடாமல் வாக்கு வங்கியை நிரூபிக்காமல் தொடர்ந்து கூட்டணியில் இடம்பெறும் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டும் தான். 


காலம் காலமாக வஞ்சிக்கப்பட்டவர்கள் வலிமை பெறுவதற்காக இந்த இயக்கம் வலிமை பெற வேண்டும். சமூக நிதியை குழி தோன்றி புதைக்க திட்டம் தீட்டுபவர்களை விரட்டி அடிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி வலிமை பெற வேண்டும். அம்பேத்கர் வடிவமைத்து தந்த அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதற்க்காக தேர்தல் அரசியலை தவிர்த்து கூட போராட்டக் களத்தில் நிற்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி. தமிழகத்தில் 6 ஆயிரம் கிராமங்களில் அம்பேத்கர் படிப்பகம் உருவாக அரசு ஊழியர்கள் துணை நிற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.