திருச்சி மத்திய மண்டலத்தில் 3 வது கட்ட ஆய்வு முடிவுகளின்படி 60 சதவீத பேருக்கு கொரோனாவிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை கட்டுக்குள் வந்துவிட்டது. தினசரி 1300 முதல் 1500 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கிடையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மெகா தடுப்பூசி முகாம் மூலம் ஞாயிற்று கிழமைகளில் 10 முதல் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தற்போது வரை தமிழகத்தில் 4.75 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி ஆய்வு (SERO SURVEY) தொடர்ந்து நடத்த பட்டுவருகிறது. இதன்படி, முதல் ஆய்வு கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. மீண்டும் இரண்டாம் கட்ட ஆய்வு கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டது.
முதல் ஆய்வில் 31% பேருக்கும், இரண்டாவது ஆய்வில் 23% பேருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது தெரியவந்தது. இந்நிலையில் மூன்றாவது கட்ட ஆய்வை, தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புதுறை இயக்குனர் செல்வவி நயாகம் தலைமையிலான குழுவினர் 46 சுகாதார மாவட்டங்களில் 827 இடங்களில் 24,586 மாதிரிகளை சேகரித்தனர். மத்திய மண்டலத்தில் உள்ள திருச்சி மாவட்டத்தில் 960 மாதிரிகள், புதுக்கோட்டையில் 600 மாதிரிகள், கரூர் மாவட்டத்தில் 390 மாதிரிகள், பெரம்பலூர் 210 மாதிரிகள், அரியலூர் மாவட்டத்தில் 270 மாதிரிகள், தஞ்சாவூர் மாவட்டடத்தில் 840 மாதிரிகள், திருவாரூர் மாவட்டத்தில் 420 மாதிரிகள், நாகை மற்றும் மயிலாடுதுறையில் 632 மாதிரிகள் சேரிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை முடிவுகளை தமிழக பொது சுகாதாரத்துறை வெளியீட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் 70 சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது தெரியவந்துள்ளது.
அதிகபட்சமாக விருதுநகரில் 88 சதவீதமும், குறைந்த பட்சமாக கரூரில் 51 சதவீதமும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. மத்திய மண்டலத்தில் உள்ள திருச்சியில் 67 சதவீதமும், புதுக்கோட்டையில் 64 சதவீதமும், கரூரில் 51 சதவீதமும், பெரம்பலூரில் 58 சதவீதமும், அரியலூரில் 56 சதவீதமும், தஞ்சாவூரில் 61 சதவீதமும், திருவாரூரில் 61 சதவீதமும், நாகையில் 64 சதவீதமும் நோய் எதிர்ப்பு உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் மக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும், அரசு கூறிய விதிமுறைகளை மக்கள் அனைவரும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும். அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனா தொற்று பரவுவதை தடுக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.