பெரம்பலூர் மாவட்டத்தின் கலெக்டராக பணிபுரிந்த ப.ஸ்ரீவெங்கடபிரியாவை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக பணி மாற்றம் செய்தும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் இணை மேலாண்மை இயக்குனராக பணிபுரிந்த க.கற்பகம் பதவி உயர்வாக பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக நியமித்து கடந்த 30-ந் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி பெரம்பலூர் மாவட்ட புதிய கலெக்டராக கற்பகம் நேற்று காலை தனது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவரிடம் பொறுப்புகளை ஏற்கனவே பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக பணிபுரிந்த ஸ்ரீவெங்கடபிரியா ஒப்படைத்தார். புதிய கலெக்டராக பொறுப்பேற்று கொண்ட கற்பகத்தை மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி மற்றும் அனைத்துத்துறைகளின் அலுவலர்கள், விவசாயிகள் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதையடுத்து கலெக்டர் கற்பகம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக என்னை நியமித்த தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 



 

இதனை தொடர்ந்து ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கலெக்டர்களின் செயல்பாடு இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சீரான பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரி கல்வி மேம்பாட்டிற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும். பெரம்பலூர் மாவட்டத்தில் நீர் வளத்தை மேம்படுத்துவதற்கு அதிக கவனம் செலுத்தப்படும். மாவட்டத்தின் வளர்ச்சிக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்திடவேண்டும், என்றார். மேலும் அவர் மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை முற்றிலும் ஒழிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும். மரங்களை பாதுகாக்கவும், மரங்களை வளர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண