புதுக்கோட்டை மாவட்டம்  ஆவூர் அருகே உள்ள மண்டையூர் நாட்ரியன்காடு பகுதியை சேர்ந்த விவசாயி ரெங்கசாமி (60), இவரது மனைவி வள்ளி (57). இவர்களுக்கு பாலசுந்தர் (27), கோபி, சங்கீதா என்ற 3 பிள்ளைகள் உள்ளனர். கேட்டரிங் படிப்பு முடித்துள்ள பாலசுந்தர் வெளியூரில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் எங்கும் வேலைக்கு செல்லாமல்  யாரிடமும் சரியாக பேசாமல் மனநலம் பாதிக்கப்பட்டது போல பிரமை பிடித்து வீட்டிற்குள்ளேயே இருந்து வந்துள்ளார். பாலசுந்தருக்கும், பெற்றோருக்கும் அடிக்கடி சண்டைகள் வந்த நிலையில்  பாலசுந்தருக்கு முனி பிடித்துள்ளதால் தான் இவ்வாறு இருப்பதாக நினைத்து ரெங்கசாமி பாலசுந்தருக்கு ஒரு உடுக்கை பூசாரி மூலம் முனியை விரட்டுவதற்கு ஏற்பாடு செய்து, அவரது வீட்டிற்கு பூசாரியை வரவழைத்திருந்தார். இந்த தகவல் பாலசுந்தருக்கு தெரியவரவே அவரது தாய் தந்தையிடம் இதுகுறித்துகேட்டு தகராறு செய்தாக கூறப்படுகிறது.

 



 

இந்நிலையில் நேற்று முன்தினம் ரெங்கசாமி வீட்டிற்கு பால் கறக்க வந்த பால்காரர், ரெங்கசாமி மற்றும் வள்ளி ஆகிய இருவரும் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அருகில் உள்ளவர்கள் மூலம் காவல்துறைக்கு  தகவல் தெரிவித்தார். இதையடுத்து மாத்தூர், மண்டையூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து, பாலசுந்தரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். காவல்துறையின் தீவிர விசாரணையில் பெற்றோரை தான் கட்டையால் அடித்தும், குத்தியும் கொலை செய்ததை பாலசுந்தர் ஒப்புக் கொண்டதாக காவல்துறை அதிகாரிகள்  தெரிவித்தனர்.  மேலும் இந்த கொலை குறித்து காவல்துறையினரிடம்  பாலசுந்தர் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்தது, நான் கேட்டரிங் படிப்பு முடித்துவிட்டு வெளியூரில் வேலை செய்து வந்தேன். இந்நிலையில் எனக்கு வேலை பார்க்க பிடிக்காததால் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வீட்டிற்கு வந்து எனது அப்பா, அம்மாவுடன் இருந்தேன். அப்போது எனது பெற்றோர் இருவரும் என்மீது அக்கறை கொள்ளாமல் என்னிடம் சரிவரப் பேசாமல் இருந்தனர். இதனால் எனது பெற்றோர் மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. அதனால் அவர்களிடம் நான் அடிக்கடி சண்டை போடுவேன் என்றார்.

 



 

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் எனக்கு பேய் பிடித்திருப்பதாக நினைத்து ஒரு பூசாரியை எங்கள் வீட்டிற்கு வர சொல்லி இருந்தனர். இதனால் மேலும் எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. அதனால் எனது அப்பா அம்மாவை கொலை செய்ய முடிவு செய்தேன்.  நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் வீட்டில் இருந்த என் அம்மா வள்ளி தலையின் பின்புறம் ஒரு கட்டையால் அடித்தேன். அதனால் அவர் கீழே சாய்ந்தார். அப்போது அதே கூர்மையான கட்டையால் அவரது கழுத்தில் குத்தி கிழித்தேன். இதை தொடர்ந்து எங்களது வீட்டின் அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்த எனது அப்பாவை வீட்டிற்கு கூட்டி வந்து அவரையும் அதே இடத்தில் வைத்து தலையின் பின்புறத்தில் கட்டையால் அடித்தும் கழுத்தில் குத்தியும் கொலை செய்தேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.  இதைத்தொடர்ந்து பாலசுந்தரை கைது செய்த மண்டையூர் காவல்துறை அவரை கீரனூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.