திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள மாந்துரை நெடுஞ்சாலைகுடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 46). இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி நித்யா என்ற மனைவியும், ஏழு வயதில் ஒரு மகளும், ஐந்து வயதில் ஒரு மகனும் உள்ளனர். உள்ளூரில் வேலை பார்த்து வந்த ராஜாவுக்கு குடும்ப வருமானம் போதாததால் அவ்வப்போது வெளியூர்களுக்கும் வேலைக்கு சென்று தங்கியிருப்பது வழக்கம். இதற்கிடையே ராஜாவின் மனைவி நித்யாவுக்கு திருச்சி வடக்கு அரியாவூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் திருமணத்திற்கு மீறிய உறவு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இந்த விஷயம் ராஜாவுக்கும் தெரிய வந்தது. இதையடுத்து அவர் மனைவியை கடுமையாக கண்டித்தார்.
மேலும் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் உடனடியாக அந்த உறவை கைவிடுமாறு கூறியுள்ளார். ஆனாலும், நித்யா திருத்திக் கொள்ளவில்லை. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் இதுதொடர்பாக ராஜா கொடுத்த புகாரின் பேரில் லால்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு வந்தததால் மனமுடைந்த ராஜா, வாழ்வதை விட சாவதே மேல் என்று நினைத்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை தூங்கி எழுந்த ராஜா மேலவாளாடி ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் தண்டவாளத்தின் அருகில் நின்றார். அப்போது அந்த வழியாக வந்த ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் அவரது உடல் பாகங்கள் சிதறிக்கிடந்தன. இது தொடர்பாக தகவல் அறிந்த விருத்தாச்சலம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசாரிடம் ராஜா தற்கொலைக்கு காரணமான ராஜாவின் மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் வடக்கு அரியாவூரைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என ராஜா உறவினர் ராஜாங்கம் கேட்டுக்கொண்டார்.
தற்கொலை தீர்வு அல்ல:
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவி மையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்