திருச்சி: இன்று மருத்துவர்கள், பொறியாளர்கள் என உயர் பதவியில் இருக்கும் யாருக்கும் தமிழ் எழுதத் தெரியவில்லை. அதற்கு காரணம் திமுக தான் என்று திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம்சாட்டினார்.

மருது சகோதரர்களின் ஜம்புத்தீவு பிரகடன நினைவு நாளை முன்னிட்டு திருச்சியில் பாஜக சார்பில் ஜம்புத்தீவு பிரகடன நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள் ஒண்டிமுத்து, அஞ்சாநெஞ்சன், முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜசேகர், பார்த்திபன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் இந்து விரோத அரசு செயல்பட்டு வருகிறது. திருச்சியில் நடந்த விசிக பேரணியில் சிஏஏ சட்டத்திற்கு எதிராகவும், 370 சட்டப்பிரிவு குறித்தும் பேசப்பட்டது. இது நாட்டிற்கு எதிரானது. நாட்டிற்கு எதிராக பேசுபவர்களுக்கு பேரணி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்து விரோதம், தேசவிரோதம் இரண்டும் ஒன்றுதான். தமிழக அரசு, இந்து விரோத, தேச விரோத போக்கை கைவிட வேண்டும். நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என முதலமைச்சர் கூறுவதை வரவேற்கிறேன். ஆனால், இத்தனை ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்த அவர்கள் அதை ஏன் செய்யவில்லை. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த பின்பு உயர்கல்வியில் தமிழ் கொண்டு வரப்படும்.

குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்ள கூடாது என முதன் முதலில் கூறியவர் ராமகோபாலன். இன்று முதல்வர் அதையே கூறுகிறார் இதுதான் பின் புத்தி. தமிழகம் தேசிய கல்விக் கொள்கை திட்டத்தில் சேராததால் தான் அந்த நிதி ஒதுக்கப்படவில்லை. மற்ற நிதிகள் வழங்கப்பட்டது. கள் இறக்குவது குறித்து சீமான் வைக்கும் கோரிக்கை சரி தான். பா.ஜ.க.வும் அதை நீண்ட காலமாக செய்து வருகிறது.

திருமாவளவன், நயினார் நாகேந்திரன் சந்தித்துக்கொண்டது அரசியல் ரீதியாக அல்ல. தனிப்பட்ட ரீதியான நலம் விசாரிப்பு மட்டுமே. இன்று அரசியலுக்காக தமிழ் ஸ்டெண்ட்டை முதலமைச்சர் அரங்கேற்றுகிறார். திமுக அரசு 1967ல் ஆட்சி அமைப்பதற்கு முன்பாக ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக இருந்தது. இன்று மருத்துவர்கள், பொறியாளர்கள் என உயர் பதவியில் இருக்கும் யாருக்கும் தமிழ் எழுதத் தெரியவில்லை. அதற்கு காரணம் திமுக தான். இவ்வாறு அவர் கூறினார்.