திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ரூ.1,042 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்க திருச்சி மாநகருக்கு நாளை காலை 8.30 மணிக்கு வருகை தர உள்ளார். இவருடன் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினும் வருகிறார். காலை 10 மணிக்கு திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் ரூ.655 கோடி மதிப்பீட்டிலான 5,639 புதிய திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.308 கோடி மதிப்பீட்டிலான 5,951 புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். மேலும் ரூ.79 கோடி மதிப்பீட்டிலான 22,716 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடன்கள் வழங்கி, மணிமேகலை விருது மற்றும் மாநில அளவிலான வங்கியாளர்களுக்கு விருதுகள் வழங்கி முதலமைச்சர் பேசுகிறார்.
இதைத்தொடர்ந்து மணப்பாறை ஒன்றியம் மொண்டிப்பட்டியில் காலை 11.30 மணி அளவில் தமிழ்நாடு காகித ஆலையின் இரண்டாம் அலகையும் மற்றும் சிப்காட் தொழிற் பூங்காவையும் திறந்து வைக்கிறார். அதனைத்தொடர்ந்து, மாலை 3 மணி அளவில் மணிகண்டம் ஊராட்சி ஒன்றிம் சன்னாசிப்பட்டியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இயன்முறை சிகிச்சை பெற்று வரும் பயனாளியின் இல்லம் சென்று நலம் விசாரிக்கிறார். பின்னர் இத்திட்டத்தின் மகத்தான சாதனை நிகழ்வாக 1 கோடியே 1-வது பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்குகிறார். திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க திருச்சி விமான நிலையத்துக்கு நாளை காலை 8.30 மணிக்கு வருகை தரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தோழமை கட்சி தலைவர்கள், தொண்டர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலையிலிருந்து மொண்டிப்பட்டி வரை திண்டுக்கல் சாலையில் வழிநெடுகிலும் பிரமாண்டமான முறையில் வரவேற்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் பல்வேறு அணிகளை சேர்ந்த கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், தோழர்கள், வேளாண் பெருங்குடி மக்கள், தொழிலாளர்கள், தாய்மார்கள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் திருச்சிக்கு வரும் முதலமைச்சருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளோம். அதைத்தொடர்ந்து திருச்சியில் இருந்து மொண்டிப்பட்டி வரை முதலமைச்சர் செல்லும் சாலையில் சுமார் 40 கிலோ மீட்டருக்கு பொதுமக்கள், மாணவ-மாணவிகள், தி.மு.க.வினர், கூட்டணி கட்சியினர் என்று திரளாக திரண்டு இருந்து வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளோம். திருச்சியில் நடைபெறும் விழாவில் 4 ஆயிரம் மகளிர் சுயஉதவி குழு பெண்களுக்கு சுழல்நிதி வழங்க இருக்கிறார் என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார். மேலும் முன்னேற்பாடு பணிகளை குறித்து அமைச்சர் நேரு, மாவட்ட ஆட்சியர், மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்