தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி(vinayagar chathurthi) என்றாலே கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம்.ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கொரோனா  தாக்கம் இருந்து வருவதால், பண்டிகை நாட்களில் மக்கள் அதிகமாக ஒரே இடத்தில் கூடினால் கொரோனா அதிக அளவில் பரவ வாய்ப்பு உள்ளதால் அவற்றை தடுக்கும் வகையில்  அரசு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.


இதன்படி விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு 4 நாட்களே உள்ள நிலையில் அரசு கட்டுப்பாடுகளின்படி சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களுக்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அதன்படி பொதுமக்கள் தங்களது வீடுகளில் மட்டுமே விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது, பொது இடங்களில் சிலை வைத்து வழிபடவும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர் நிலைகளை கரைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனிநபர்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும் அருகில் உள்ள நீர்நிலைகளில் தனிநபராக சென்று கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.




அதேபோல் வீடுகளில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கோயில்களில் வெளிப்புறத்திலும், சுற்றுப்புறத்திலும், வைத்து செல்ல அரசு அனுமதி வழங்கி உள்ளது. திருச்சி திருவானைக்காவல் கீழ கொண்டயம்பேட்டை பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விநாயகர் சிலை தயாரிக்கும் கலைஞர்கள் கூறியதாவது, “எங்கள் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பரம்பரை பரம்பரையாக விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம், இங்கிருந்து திருச்சி மட்டுமின்றி கரூர், அரியலூர் ,பெரம்பலூர், புதுக்கோட்டை, உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிலைகள் அனுப்பப்படுகின்றன.கொரோனா  காரணமாக கடந்த ஆண்டு பெரிய சிலைகள் விற்பனைக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனால் செய்த சிலைகள் விற்பனையாகாமல் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. மேலும் இந்த ஆண்டும் நஷ்டம் ஏற்பட்டால்  அதிலிருந்து மீண்டு வரமுடியாது, என்பதால் அரசு அறிவிப்புக்காக காத்திருந்தோம், ஆனால்  ஏமாற்றம் அளிக்கும் வகையில் இந்த ஆண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 




இதனால் அரசு விதிமுறைகள் படி பெரிய சிலைகள் செய்யாமல் வீட்டில் வழிபட 1 அடிக்கும் சிறிய களிமண் சிலைகள் மட்டுமே தயாரித்து வருகிறோம், பெரிய சிலைகளில் கிடைப்பது போல் இதில் அதிக லாபம் கிடைக்காது என்றாலும் வேறு வழியின்றி செய்து வருகிறோம். மக்கள் அதிக அளவில் இந்த சிலைகளை வாங்கினால் மட்டுமே எங்கள் வாழ்வாதாரம் காக்கப்படும் என்றார். தமிழகத்தில் கொரோனா  தொற்று தொடர்ந்து சில மாவட்டங்களில் அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் ஊரடங்கு நீட்டித்து மாநில அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக பண்டிகை நாட்களில் மக்கள் அதிகமாக ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும் அதேபோன்று கோயில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு, ஆகிய மூன்று நாட்களும் மக்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆகையால் அரசு கூறிய விதிமுறைகளை முறையாக மக்கள் பின்பற்ற வேண்டும் எனவும் முகக் கவசங்கள் அணிவதும், சமூக இடைவெளியை பின்பற்றுவதும் ,தொற்று மேலும் பரவாமல் இருப்பதற்கு வழி வகை செய்யும் ,அதேபோன்று கட்டாயமாக அனைவரும் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வேண்டும்” என அரசு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.