மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், முதற்கட்டத்திலே தமிழ்நாட்டிற்கு தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் 20ம் தேதி முதல் தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக நாளை முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்க உள்ளது.இந்த நிலையில், திருச்சியில் நாளை முதல் வேட்புமனு தாக்கல் செய்ய வருபவர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப்குமார் முக்கிய விவரங்களை வெளியிட்டுள்ளார். செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 


இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 18ஆவது மக்களவைக்கான பொதுத் தேர்தல்-2024 தமிழ்நாட்டில் வருகின்ற 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதன் அடிப்படையில் வேட்பு மனுத்தாக்கல் நாளை 20ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுத்தாக்கல் தொடங்க உள்ளது. இதனை தொடர்ந்து, மார்ச் 27 ம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனு மீதான பரிசீலனை என்பது மார்ச் 28 ம் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனு வாபஸ் பெற மார்ச் 30ம் தேதி கடைசி நாளாகும். அதன்பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு ஏப்ரல் 19 ம் தேதி 39 லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை என்பது ஜுன் 4ம் தேதி நடைபெற உள்ளது.




வேட்பு முனு தாக்கல் செய்ய வருபவர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பு.. மாவட்ட தேர்தல் அலுவலர் முக்கிய அறிவிப்பு..


திருச்சி பாராளுமன்றத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு ஓர் உறுப்பினரை தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடக்கவிருக்கிறது. வேட்பாளர் அல்லது அவரது பெயரை முன் மொழிபவர்களில் ஒருவர் தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் (முதல் தளம்), திருச்சி அல்லது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் / வருவாய் கோட்டாட்சியர், திருச்சிராப்பள்ளி அவரது அலுவலகத்தில் (அரசாங்க விடுமுறையில்லாத) ஒரு தினத்தில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரையில் 27.03.2024 (புதன் கிழமை) ஆம் தேதிக்குப் பிற்படாமல் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். மேற்சொன்ன இடத்திலும் நேரத்திலும் வேட்புமனுக்கள் கிடைக்கும். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் போது 100 மீட்டருக்குள் 3 வாகனங்களும், வேட்பாளரோடு சேர்த்து 5 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.


வேட்புமனுக்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், திருச்சிராப்பள்ளி முதல் தளத்தில் 28.03.2024 ஆம் தேதியன்று (வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். வேட்பாளர் அல்லது அவரது பெயரை முன்மொழிபவர்களில் ஒருவர் அல்லது வேட்பாளரால் எழுத்து மூலம் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள அவரது தேர்தல் முகவர் வேட்பாளர் விலகல் அறிவிப்பை மேலே குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் எவரிடத்திலேனும் அவரது அலுவலகத்தில் 30.03.2024 ஆம் தேதியன்று (சனிக்கிழமை) மாலை 03.00 மணிக்குள் கொடுக்கலாம். தேர்தலில் போட்டியிருந்தால் 19.04.2024 ஆம் தேதியன்று (வெள்ளிக்கிழமை) காலை 07.00 மணி முதல் மாலை 06.00 மணி வரையில் வாக்குப்பதிவு நடத்தப்படும் என்ற விபரம் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினருக்கு இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.