மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வாய்க்கால் கரை தெருவை சேர்ந்த முனியப்பன் (48) நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது மனைவி கலைவாணி (40), இரண்டாவது மகள் ஹரிணி (13), மகன் கார்முகிலன் (5) ஆகியோருடன் சொந்த ஊரான கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு காரில் சென்றார். அங்கு முனியப்பன் குடும்பத்தினருடன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் அங்குள்ள உறவினர்கள் வீடுகளுக்கு சென்றார். இதையடுத்து அவர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் சகோதரி வீட்டில் உடல் நலக்குறைவுடன் வசித்து வந்த தனது தாய் பழனியம்மாளை (70) காரில் அழைத்துக்கொண்டு, குடும்பத்தினருடன் மீண்டும் சீர்காழிக்கு நேற்று அதிகாலை புறப்பட்டார். காரை முனியப்பன் ஓட்டினார். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே அதிகாலை 4 மணியளவில் அந்த கார் வந்தது. அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் டிரைவர் சுங்கச்சாவடியை பார்த்ததும் திடீரென்று பிரேக் பிடித்ததாக கூறப்படுகிறது.

 



 

இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில், முனியப்பன் ஓட்டி வந்த கார், அந்த லாரி மீது மோதியது. அப்போது பின்னால் வேகமாக வந்த டிப்பர் லாரி, அந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இதனால் கார் முன்னால் நின்ற லாரியின் அடியில் சிக்கியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கி உருக்குலைந்தது. காருக்குள் இடிபாடுகளுக்கிடையே சிக்கி படுகாயமடைந்த முனியப்பன், கலைவாணி, ஹரிணி, பழனியம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் கார்முகிலன் மட்டும் படுகாயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனை கண்ட சுங்கச்சாவடி ஊழியர்கள் இதுகுறித்து மங்களமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசாரும், நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, படுகாயமடைந்த கார்முகிலனை காரில் இருந்து மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் உயிரிழந்த முனியப்பன், கலைவாணி, ஹரிணி, பழனியம்மாள் ஆகியோரின் உடல்களை காரில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து விபத்துக்குள்ளான காரை சாலையில் இருந்து காவல்துறையினர் அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

 



 

மேலும்  விபத்து குறித்து மங்களமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரி டிரைவரான தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பெருமாளை (42) கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். கார் விபத்துக்குள்ளாகி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம், அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த ஹரிணி ஒரு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார். படுகாயமடைந்த கார்முகிலன் 1-ம் வகுப்பு படித்து வருகிறான். முனியப்பனின் மூத்த மகள் வர்ஷினி (17) திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விடுதியில் தங்கியிருந்து பிளஸ்-2 படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். நேற்று நடந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.