போதை பொருள் கடத்தலால் இந்திய அளவில், தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்படுத்திய விடியா திமுக அரசை கண்டித்து திருச்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி தலைமறைவாக உள்ளார். டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஜாபர் சாதிக்கிற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து அவரை தேடி வருகின்றனர். இதனிடையே, தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டதாகவும் அதனை தடுக்க தவறிய விடியா திமுக அரசை கண்டித்து தமிழக முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதன்படி, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


அதன் ஒரு பகுதியாக, அதிமுக திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட கழக, இளைஞர் இளம்பெண்கள் பாசறை மகளிர் அணி மாணவர் அணி ஆகிய சார்பு அமைப்புகளின் சார்பில், திருச்சி மாவட்ட புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்பி குமார், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் துணை மேயர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.




மேடையில் முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி பேசியபோது:


தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருவதாக தொடர்ந்து அதிமுக தரப்பில் வைக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஆட்சியில் இருக்கக்கூடிய திமுக அரசு அதைக் கண்டு கொள்ளாமல் இளைஞர்களை சீரழிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டது. போதை பொருள் உற்பத்தி செய்யும் ஒவ்வொரு உடன் திமுக குடும்பத்திற்கு நெருங்கி அதனால்தான் போதை பழக்கத்தையும் போதை பொருள் விற்பனையும் தடுக்க திமுக அரசு தவறி விட்டதாக குற்றம் சாட்டினார். திமுகவை வீழ்த்தி அதிமுக 40க்கு 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெற மக்கள் உறுதியாக உள்ளனர் என பேசினார்.




தொடர்ந்து  அதிமுக முன்னாள் எம்.பி. பா.குமார் பேசியதாவது:


தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சிக்கு வந்து ஏறத்தாழ 3 ஆண்டுகள் முடிந்துவிட்டது. ஆனால் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வருகின்ற நிலை தான் தமிழ்நாட்டில் நீடித்து வருகிறது. தமிழ்நாட்டில் போதை பொருளை கட்டுப்படுத்த வேண்டுமென அதிமுக தொடர்ந்து குரல் கொடுத்தாலும் அதை கண்டுகொள்ளாமல் திமுக அரசு செயல்பட்டது. மக்கள் மீது எந்த நலனும் காண்பிக்காமல், போதைப்பொருளை உற்பத்தி செய்பவர்களுக்கும் விற்பனை செய்பவர்களுக்கும் அரணாக  திமுக அரசு இருக்கிறது. 


போதைப் பொருள் வழக்கில் முக்கிய குற்றவாளியான சாதிக் பாஷா, முதலில் ஜக்குபாய் படத்தின் சீடியை திருட்டுத்தனமாக விற்பனை செய்ததற்காக கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றார். இதனைத் தொடர்ந்து அவ்வப்போது வெளிநாடுகளுக்கு குருவி போன்று பறந்து சில கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இதனைத் தொடர்ந்து இயக்குனர் அமீர் இயக்கிய ஆதி பகவன் படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். அந்தப் படத்தின் தயாரிப்பாளராக இருந்தவர் திமுக மறைந்த எம்எல்ஏ ஜெ.அன்பழகன் ஆவார். இவர் மூலமாக திமுகவின் முக்கிய நிர்வாகிக்கு சாதிக் பாஷா பழக்கமானார். பின்பு திமுக நிர்வாகியாக அப்போது இருந்த சிற்றரசு மூலம் உதயநிதி ஸ்டாலினுக்கு நண்பராக சாதிக் பாஷா பழக்கமானார். பின்பு அதனைத் தொடர்ந்து திரை உலகம் சார்பாக நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு போதை பொருட்களை விற்பனை செய்வதை தொடங்கினார். 




குறிப்பாக நட்சத்திர விருந்துகளில் நடக்கக்கூடிய அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் போதை பொருளை விற்பனை செய்யும் முக்கிய நபராக இவர் திகழ்ந்தார். அதுமட்டுமில்லாமல் லயோலா கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருளை சப்ளை செய்வதில் இருந்து வெளிநாடுகளுக்கு சப்ளை செய்யும் வரைக்கும் தனது தொழிலை விரிவு படுத்தினார். இதற்கு உடந்தையாக உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ், சேகர் பாபு, கனிமொழி, உள்ளிட்ட பலர் இருந்தனர். சாதிக் பாஷாவிடம் பணம் பெறாத திமுக நிர்வாகிகள் கிடையாது என குற்றம் சாட்டினார். 


திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் தயாராக உள்ளார்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 தொகுதியிலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மாபெரும் வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும். திமுக அரசு 2ஜி வழக்கில் ஊழல் செய்ததை மக்கள் எதிர்த்து அதிமுகவுக்கு வாக்களித்ததால் 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைந்தது.அதேபோல் தற்போது போதை பொருள் விற்பனை செய்யும் நபர்களுடன் திமுக குடும்பங்கள் திமுகவின் முக்கிய அமைச்சர்கள் அனைவரும் தொடர்பில் உள்ளார்கள். ஆகையால் திமுக அரசு முடிவு கட்ட மக்கள் தயாராக உள்ளனர் என்றார்.


திருச்சி அதிமுகவில் சிலர் உண்மையாக செயல்படவில்லை என்பது தெரிகிறது. அனைவரும் ஒன்றிணைந்து உண்மையாக உழைத்தால் மட்டுமே நம் இயக்கம் வலுவடையும் . ஆகையால் அனைவரும் உண்மையாக கட்சியில் உழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.