திருச்சி: 1.93 லட்சம் குழந்தைகளுக்கு வழங்கபட்ட போலியோ சொட்டு மருந்து - மாவட்ட ஆட்சியர் தகவல்

திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமினை பொதுமக்கள் அனைவரும் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்.

Continues below advertisement

திருச்சி  மத்திய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள போலியோ சொட்டு மருந்து முகாமில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் , 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதை பார்வையிட்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.

Continues below advertisement

இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்ததாவது:

அரசின் அறிவுரையின்படி திருச்சி மாவட்டத்தில் நேற்று (03.03.2024) முதல் தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை நடைபெற்றது. மேலும், பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இரண்டு சொட்டுகள் போலியோ சொட்டு மருந்து வாய்வழியாக வழங்கப்பட்டது. மேலும், 27.03.2014-ம் தேதிய இந்தியாவில் போலியோ நோய் தாக்கம் இல்லை என்று சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. இருப்பினும் அண்டை நாடுகளில் போலியோ நோயின் தாக்கம் இருப்பதால் தொடர்ந்து இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.


அனைத்து ஊரக மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் நேற்று 03.03.2024 பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.ஸ்ரீரங்கம், குணசீலம், சமயபுரம், வயலூர் ஆகிய கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் அனைத்து பேருந்து நிலையங்கள். இரயில்வே நிலையங்கள், விமான நிலையம், முக்கொம்பு போன்ற சுற்றுலாதலங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க 52 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து வர இயலாத இடங்களில் அவர்களுக்கு 63 நடமாடும் குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இரயில்வே நிர்வாகத்துடன் இணைந்து திருச்சியிலிருந்து செல்லும் மற்றும் திருச்சி வழியாக செல்லும் அனைத்து ரயில்களில் 03.03.2024 முதல் 05.03.2024 வரை அன்று ரயில் பயணம் செய்யும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று 03.03.2024 கிராமப்புறங்களில் 1,26,969 குழந்தைகளுக்கும், நகர்புறங்களில் 66,994 குழந்தைகளுக்கும். இடம் விட்டு இடம் பெயர்ந்துள்ள 91 குழந்தைகள் மற்றும் அகதிகள் முகாமில் உள்ள 81 குழந்தைகளுக்கும் ஆக மொத்தம் 1,93,963 குழந்தைகளுக்கு 1,695 முகாம்கள் வாயிலாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.


ஊரக பகுதிகளில் 102 சதவீதமும், நகர்ப்புறங்களில் 101.8 சதவீதமும் போலியோ சொட்டு மருந்து இம் முகாம் மூலம் இன்று வழங்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததைவிட 100 சதவீதத்திற்கு மேல் போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கு வீரப்பூர், சமயபுரம், கம்பரசம்பேட்டை ஆகிய ஊர்களில் நடைபெற்ற திருவிழாக்கள் மற்றும் மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் இரயில் நிலையம் ஆகிய இடங்களில் மக்கள் அதிக அளவில் இம்முகாமினை பயன்படுத்திக் கொண்டதும் ஒரு காரணமாகும். 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் இன்று நடைபெறும் முகாமில் கட்டாயம் போலியோ சொட்டு மருந்து கொடுப்பது போலியோ நோயிலிருந்து முழு பாதுகாப்பை அளிக்கும். எனவே பெற்றோர்கள் அனைவரும் தங்களின் பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளையும் அருகில் உள்ள போலியோ சொட்டு மருந்து முகாம் மையத்திற்கு அழைத்துச்சென்று தவறாமல் போலியோ சொட்டு மருந்தினை குழந்தைகளுக்கு தரவேண்டும்.

Continues below advertisement