தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டத்தில் நேற்று மாலைவரை வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றுவருகிறது. மேலும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளும் அரசியல் முக்கிய பிரமுகர்கள் வாக்காளர்கள் இடையே வாக்கு அறுவடை செய்யும் பணியை ஆரம்பித்திருக்கின்றனர்.


 




அந்தவகையில், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோடங்கிப்பட்டி பட்டாளம்மன் கோயில் அருகே முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று தனது பிரசாரத்தை தொடங்கினார். இப்பகுதியில் போட்டியிடும் 47ஆவார்டு அதிமுக வேட்பாளர் கேசவனை ஆதரித்து அவர் செய்த பிரசாரத்தில் தெற்கு நகர அதிமுக செயலாளரும், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் விசிகே ஜெயராஜ், அதிமுக நிர்வாகி ஏகாம்பரம் மற்றும் கோடங்கிபட்டி, ராயனூர் மற்றும் காளியப்பனூர் வார்டு பகுதிகளுக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களும், மாவட்ட அதிமுக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.


 




முன்னதாக, நேற்றிரவு தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோடங்கிபட்டி பட்டாள் அம்மன் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்த பிறகு திமுக வேட்பாளரை ஆதரித்து 10 இடங்களில் பிரசாரம் செய்தார். அதைத் தொடர்ந்து அதே ஆலயத்திலிருந்து இன்று முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளர் எம் .ஆர். விஜயபாஸ்கர் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கியிருக்கிறார்.


 




அப்போது பேசிய விஜயபாஸ்கர், ”தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு நாள் ஒன்றுக்கு மூன்று பேர் படுகொலை செய்யப்படுகிறார்கள். இதுதான் திமுக அரசின் அவல நிலை. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுக அரசு சொந்தம் கொண்டாடுகிறது. 


 




2024ஆம் ஆண்டுவரை இப்போதைய அரசு இருக்காது. விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்படுத்தப்பட உள்ளது. மக்களவைத் தேர்தலோடு இணைந்து சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறும். அப்போது அதிமுக அரசு அமையும். இந்த ஆட்சியில் எந்த வாக்குறுதியும் நிறைவேறாது. அதிமுக சார்பாக போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் ஆளுங்கட்சியினரால் மிரட்டப்படுகிறார்கள். கந்துவட்டி, கஞ்சா, குட்கா என்று பொய் வழக்குகளை போடுகிறார்கள். 


லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர்களுக்கு திமுகவில் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. மணல் திருட்டு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. கரூர் மாவட்டத்தில் மதுபானங்கள் விற்பனை செய்யும் சந்துக் கடைகள் இல்லாத இடமே கிடையாது” என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண