அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள பெரியாத்துகுறிச்சி கிராமம் அரியலூர் மற்றும் கடலூர் மாவட்ட பகுதிகளை இணைக்கும் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 40) என்பவர் அய்யனார் கோவில் அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு 2 புலிகள் நிற்பதை கண்ட மாடுகள் மிரண்டு அங்குமிங்கும் ஓட தொடங்கின. இதனைக்கண்ட பாலகிருஷ்ணன் அலறிக் கொண்டு கிராமத்தை நோக்கி ஓடி சென்றார். அப்போது அந்த புலிகள் பரமசிவம் என்பவரது கரும்பு தோட்டத்துக்குள் புகுந்து ஓடியது. இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் கரும்பு தோட்டத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது சில கால் தடங்கள் பதிவாகி இருந்தது. இது புலி அல்லது சிறுத்தையின் கால் தடமாக இருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்து உள்ளனர். இதையடுத்து, ஆண்டிமடம் போலீசாருக்கும், மாவட்ட வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது அந்த கால் தடங்கள் புலியின் கால் தடங்கள் இல்லை என்று தெரிவித்தனர். வேறு ஏதேனும் வன விலங்குகளின் கால் தடமாக இருக்கலாம் என்றும், அதன் பாத சுவடுகளை பதிவு செய்து ஆய்வுக்காக எடுத்துக் கொண்டனர்.

 



 

மேலும், புலிகள் நடமாட்டம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கருவேப்பிலங்குறிச்சி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அமைந்துள்ளது. அதேபோல் ஆண்டிமடம் பகுதியில் திருகோணம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி உள்ளது. இந்தப் பகுதிகளில் இருந்து பெரியாத்துக்குறிச்சி பகுதி வரை புலிகள் வர வேண்டும் என்றால் இடையில் இருக்கும் குடியிருப்புகளை கடந்து தான் வரவேண்டிய நிலை உள்ளது. எனவே புலிகள் பெரியாத்துக்குறிச்சி பகுதிக்கு வந்திருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். இருந்தபோதிலும் சந்தேகத்திற்குரிய விலங்கின் கால் தடங்களை சேகரித்ததோடு அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் அறிவுரை கூறினர். மேலும், அருகே உள்ள கடலூர் மாவட்ட பகுதிகளிலும் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் பெரியாத்துக்குறிச்சி பகுதியில் போலீசார், வனத்துறையினர், வருவாய்த்துறையினர் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

 

 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண