திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகில் உள்ள கிளியூர் குளத்திற்கு ஏராளமான அரிய வகை வெளிநாட்டு பறவைகள் தற்போது வந்துள்ளன. பொதுவாக பறவைகள் உணவு தேடியும் தட்பவெப்ப சூழ்நிலை மாறுபாடுகளை எதிர்கொள்ளவும் பல்வேறு நீர் நிலைகளை தேடி ஆண்டுதோறும்  வலம் வருகின்றன. பல்லாயிரம் மயில் தூரத்தைக் கடந்து பறவைகள் வலசை போவதற்கான முதன்மையான காரணங்களில் ஒன்று உணவு தேடல் மற்றொன்று தாங்கள் வாழும் இடத்தில் குளிர்காலத்தில் கட்டும் குளிரில் இருந்து தப்பிக்க நீண்ட தொலைவுக்கு நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் இடம்பெயரும், பறவைகளை தான் வெளிநாட்டுப் பறவைகள் என்கிறோம். இவை இனப்பெருக்கத்திற்கு மீண்டும் தங்கள் தாய் நிலம் திரும்புகின்றன. 




தற்போது கிளியூருக்கு ஐரோப்பிய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய பகுதிகளிலிருந்து ஆண்டுதோறும் வழக்கமாக வலசை வரும் ஊசி வால் வாத்து, நீலச்சிறவி வாத்து, ஆண்டி வாத்து, கருவால் மூக்கன், பழுப்புக் கீச்சான்கள், உள்ளிட்ட பறவைகள் வந்து குவிந்துள்ளன. இதுபோல உள்நாட்டுக்குள் குறைந்த தொலைவு வலசை செல்லும் பறவைகளான கூழைக்கடாக்கள், நத்தைக்கொத்தி நாரைகள், அரிவாள் மூக்கன்கள், மஞ்சள் மூக்கு நாரை, மீசை ஆலாக்கன், தகைவிலான்கள், குள்ளத் தாராக்கள், உள்ளிட்ட பல்வேறு பறவைகள் வலசை வந்துள்ளன. 




இந்த பறவைகளின் வருகை குறித்து பறவை ஆர்வலர் பாலபாரதி கூறுகையில், தமிழகத்தில் பறவைகள் வலசை வரும் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டியது முக்கியம். மேலும் அதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை நாம் இன்னும் அதிகப்படுத்த வேண்டும். பறவைகள் தங்களது நலனுக்காக வலசை போனாலும், இவற்றால் மகரந்தச் சேர்க்கை, கழிவுகளால் மண்வளம் பெருகுதல், பூச்சிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தல், விதைகளைப் பரப்புதல் மூலம் தாவர வகைகள் பரவுதல் என பல்லுயிர் பெருக்கம் நிலை பெறுவதற்கு காரணமாக அமைந்துள்ளன. எனவே வலசை போகும் பாதைகள் நீர் நிலைகள், தங்குமிடங்கள் ,வாழ்விடங்கள் போன்றவற்றை பாதுகாக்க வேண்டியது மிகவும் தேவையானது . தற்போது கிளியூர் குளத்தை பறவைகள் சரணாலயமாக மாற்றுவது தொடர்பாக வனத்துறையினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதும் பறவை ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.




மேலும் ஒவ்வொரு பருவத்திலும், பறவைகள் உணவு குறைவாக கிடைக்கும் இடத்திலிருந்து உணவு அதிகம் கிடைக்கும் இடத்தை நோக்கி இடம்பெயர்கின்றன. பருவ காலம் மாறியதும் மீண்டும் பழைய இடத்திற்கு இடம் பெயர்ந்து விடும்.  இவ்வாறு இவை வெகு தொலைவிற்கு பறக்கும் போது இயற்கை பேரிடர் உட்பட பல சவால்களை சந்திக்க வேண்டும். இது போன்ற சவால்களை சமாளிக்குமாறு அவை தகவமைப்பை பெற்றுள்ளன. இடம்பெயர்ந்து செல்வதற்கு முன்பாக சில வாரங்களுக்கு நிறைய உணவை உட்கொண்டு அதை கொழுப்பாக மாற்றி உடலில் சேமித்து வைத்துக் கொள்ளும்.  இக்கொழுப்பையை நீண்ட தொலைவுக்கு பறக்கும் போது தேவைப்படும், ஆற்றலாக மாற்றிக் கொள்கின்றன .


இப்போது கூட இங்கே கிளியூரில் அவை ஓய்வெடுப்பது போல  தெரிவது, அவற்றின் கொழுப்புகளை  சேர்த்தலுக்காகவே. ஆர்டிக் ஆலா போன்ற பறவைகள் ஒரே முயற்சியில் தாங்கள் செல்ல வேண்டிய 12 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவையும் கடக்கும் திறன் பெற்றவை. சில பறவை இனங்கள் இடையிடையே தங்கி தங்கள் உடலில் கொழுப்பை சேர்த்துக் கொண்டு மீண்டும் பயணத்தை தொடர்பவை. இப்படிதான் ஐரோப்பாவில் இருந்து இங்கே பறவைகள் வந்து செல்கின்றன. பறவைகள் இடம்பெயரும் போது அவை செல்லும் பாதைகளை வலசைப் பாதைகள் என்போம். மேலும் கிளியூர் பகுதிக்கு அதிக அளவில் வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளதால் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து வருகிறார்கள்.