அம்மன் சன்னதியில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன்கோவில். இந்த அம்மன் சுயம்புதிருமேனியில் நவக்கிரக ஆதிக்கத்தை உள்ளடக்கி நவக்கிரகங்களை நவசர்ப்பங்களாக திருமேனியில் தரித்து அருள்பாலிக்கிறார். எனவே சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்வதன் மூலம் நவக்கிரகதோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இத்தலத்தில் இருக்கும் அம்மனை அமாவாசை, பவுர்ணமி மற்றும் கிரகணகாலங்களில் வழிபட்டால் உச்சபலன் கிடைக்கும். மேலும், இத்தலத்தில் அம்மனை வழிபட்டால் ராகு, கேது திசை தோஷம் நிவர்த்தி ஆகும் என்பதற்கு கோவிலின் மேற்கூரையில் சிற்ப சான்றுகள் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் அதிபதியாக அம்மன் ஆட்சி புரிகிறாள் என்பதற்கும் மேற்கூரையில் சிற்ப சான்றுகள் உள்ளன. தட்சன் யாகத்துக்குச்சென்ற தாட்சாயிணியை தூக்கி சிவபெருமான் ருத்ரதாண்டவம் ஆடியபோது அம்மனின் திருக்கண் இப்பகுதியில் விழுந்ததால் இந்தத் திருத்தலத்திற்கு கண்ணனூர் என்ற பெயர் புராணகாலம் தொட்டே இருந்து வருகிறது. மிகத்தொன்மையான உற்சவ அம்மனின் திருமேனியில் இன்றும் ஆயிரம் கண்கள் உள்ளன. இது, இத்தலத்தின் பெருமையை விளக்குவதாக அமைந்துள்ளது.




மாயசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலகநன்மைக்காகவும் இத்திருத்தலத்தில் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எல்லாவிதமான நோய்களும், தீவினைகளும் அணுகாமல் இருக்கவும், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கவும் மரபுமாறி அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது வழக்கம். ஆண்டுதோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல், பங்குனி மாதகடைசி ஞாயிறு வரை இந்த விரதத்தை அம்மன் மேற்கொள்வது தனிச்சிறப்பு ஆகும். இந்த 28 நாட்களும் கோவிலில் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளுமாவும், நீர்மோர், கரும்பு, பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. இப்படி சிறப்புமிக்க இக்கோவிலில் பூச்சொரிதல் விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.


இதையொட்டி, அதிகாலை விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், அனுக்ஞை, வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம் முடிந்து காலை 6.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் மீனலக்கனத்தில் அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் பூச்சொரிதல் விழா தொடங்குகிறது. பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர். மேலும் சமயபுரம் பகுதி முழுவதும் விழா கோலம் கொண்டுள்ளது.









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண