கேரளா மற்றும் கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 85 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 84 ஆயிரத்து 923 கன அடி அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதே போல கபினி அணைக்கு வினாடிக்கு 34 ஆயிரத்து 176 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 32 ஆயிரத்து 900 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  இந்த 2 அணைகளின் பாதுகாப்பு கருதி இன்று காலை 6 மணி முதல் உபரி நீர் 1 லட்சத்து 17 ஆயிரத்து 823 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பெய்து வரும் மழையின் அளவை பொறுத்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு கூடுதலாகவும், குறைவாகவும், மாறி மாறி திறக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரை புரண்டு ஒகேனக்கலுக்கு வருகிறது. நேற்று ஒகேனக்கல்லுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப் பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்து மேலும் அதிகரித்து இன்று காலை 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளையும் மூழ்கடித்தபடி தண்ணீர் செல்வதால் ஒகேனக்கல் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.




மேலும் மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 82 ஆயிரத்து 642 கன அடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 349 கனஅடியாக அதிகரித்தது. இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 1 லட்சத்து 18 ஆயிரத்து 671 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவிலேயே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் மிக வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று காலை 112.96 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்து இன்று காலை 8 மணியளவில் 119.29 அடியானது. 11 மணி அளவில் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் காவிரியில் 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்பட உள்ளது. அணையின் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் உட்பட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.




இந்நிலையில் தென்மேற்கு பருவமழை காரணமாக மேட்டூர் அணையில் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் , எந்த நேரத்திலும் அணையில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே காவிரி கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், சலவைத் தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், நீர்வரத்து விவரத்தினை அவ்வப்போது தெரிந்து கொள்ளுமாறும், தேவைப்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. காவிரி நீர் நிலையில் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ அல்லது பொழுதுபோக்கவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. பாதுகாப்பற்ற கரையோரங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் நின்றுகொண்டு பொதுமக்களோ அல்லது மாணவர்களோ 'செல்பி' எடுக்க அனுமதி இல்லை என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண