பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் தெற்கு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலு மகன் ராமலக்கன் (வயது 23). இவர் தனியார் டயர் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் முதலில் நட்புடன் பழகியபோதும், நாளடைவில் அதுவே காதலாக மாறியது. செல்போன் எண்களை பகிர்ந்துகொண்ட அவர்கள் மணிக்கணக்கில் பேசி காதலை வளர்த்து வந்துள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ராமலக்கன் மாணவியை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார். அவரிடம் விரைவில் நாம் திருமணம் செய்து கொள்வோம் என்று ஆசை வார்த்தைகள் கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதற்கிடையே மாணவியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டது. அடிக்கடி வயிற்று வலியும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவியின் பெற்றோர் மகளை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்து பார்த்தபோது மாணவி இரண்டு மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதைக்கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை தொடர்ந்து மகளிடம் கேட்டபோது, அவர் நடந்ததை கூறி அழுதுள்ளார். பின்னர் இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலக நன்னடத்தை அலுவலர் கோபிநாத் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ் பெக்டர் கலா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தார். மாணவயிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை கர்ப்பமாக்கிய ராமலக்கனை கைது செய்தார். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள் குடும்ப சூழ்நிலையை அறிந்து படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றும், தெரியாத நபர்களிடம் அளவோடு பழகவேண்டும் என்றும் இன்ஸ்பெக்டர் கலா மாணவிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்