புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியிலிருந்து நேற்று முன்தினம் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் இந்திய எல்லையான நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த ஒரு விசைப்படகையும், அதில் சென்ற 4 மீனவர்களையும் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த 4 விசைப்படகையும் பறிமுதல் செய்து, அதில் சென்ற 24 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மீனவர்கள் குடும்பத்தினர் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யக்கோரி கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கிடையே ஜெகதாப்பட்டினம் மீனவ சங்கத்தில், சங்க நிர்வாகிகள் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 24 மீனவர்களையும், அவர்கள் சென்ற 5 விசைப்படகையும் விடுவிக்க வேண்டும். மேலும், 24 மீனவர்களையும், அவர்களது விசைப்படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை வலியுறுத்தி இன்று முதல் காலை வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாகவும், இலங்கை அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாகவும் முடிவு எடுக்கப்பட்டது.

 



 

மேலும் அனைத்து மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகளையும் அழைத்து ஆலோசனை செய்து மிகப்பெரிய அளவில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர். மீனவ சங்க நிர்வாகிகள் வேலைநிறுத்த அறிவிப்பால் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு செல்ல மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. இதுக்குறித்து மீனவர்கள் கூறியது.. விசைப்படகில் எங்கள் பகுதியை சேர்ந்த 5 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்களுடன் சேர்ந்து 24 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு இதேபோல் விசைப்படகில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற போது விசைப்படகை பறிமுதல் செய்து, மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் மீனவர்களை மட்டும் விடுதலை செய்தனர். விசைப்படகை விடுவிக்கவில்லை. பின்னர் மற்றொரு விசைப்படகு வாங்கி தொழிலுக்கு சென்று கொண்டு இருகிறோம் என்றனர். இதேபோல் 2020-ம் ஆண்டும் மீன்பிடிக்க சென்ற போது விசைப்படகை பறிமுதல் செய்து, மீனவர்களை விடுவித்தனர். அப்போதும் விசைப்படகை திருப்பி தரவில்லை. பின்னர் எங்களுடைய தங்க நகைகளை விற்றும், வட்டிக்கு ரூ.25 லட்சம் பெற்று புதிதாக படகை வாங்கி தொழில் செய்து வருகிறோம். தற்போது இலங்கை கடற்படையினர் 24 மீனவர்களை கைது செய்து, படகுகளை பறிமுதல் செய்த சம்பவம் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தற்போது என்னுடைய 3 படகுகளும் இலங்கையில் உள்ளது. அதன் மதிப்பு ரூ.70 லட்சம் ஆகும். 3 படகுகளையும் பறி கொடுத்துவிட்டு என்ன செய்வதென்று தெரியாமல் இருந்து வருகிறோம். எனவே என்னுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது என தெரிவித்தனர்.



 

இதனை தொடர்ந்து இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. நேற்று முன்தினம் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற எங்கள் பகுதி மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் உடனே தலையிட்டு 24 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.