அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி கிராமம் குருநாதன் தெருவைச் சேர்ந்த முருகனின் மகன் ரஞ்சித்குமார். வயது 22. இவர் பி.எஸ்சி. பட்டப்படிப்பு முடித்து சென்னையில் கேட்டரிங் வேலை செய்து வருகிறார். இவருக்கும்  விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையம் வெண்ணையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆனந்தனின் மகள் ஆர்த்தி வயது 21, ஆவார். இந்நிலையில் இருவருக்கும்  புதுச்சேரியில் நடந்த ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டபோது பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து இருவரும் தொலைபேசி மூலமாக நண்பர்களாக பேசதொடங்கினர். பின்பு நாளடைவில் காதலாக மாறியது. ஆர்த்தி புதுச்சேரியில் உள்ள ஒரு மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார். இருவரும் பழகியதால் கடந்த சில மாதங்களாக நேரில் சந்தித்து கொள்ளுவதை வழக்கமாக வைத்து இருந்ததாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் இருவர் வீட்டார்களுக்கு காதல் விவகாரம் தெரியவந்தது. இதனால்  காதலுக்கு ஆர்த்தியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஆர்த்தி தொலைபேசி மூலமாக ரஞ்சித்தை தொடர்ப்புகொண்டு நடந்த பிரச்சனையை கூறியுள்ளார்.

 



 

இதனால் கடந்த 21-ந் தேதி ரஞ்சித்குமார்  ஆர்த்தியை சென்னைக்கு அழைத்துச்சென்று அங்குள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் கோடாக்குப்பம் காவல்நிலையத்தில்  நிலையத்தில் ஆர்த்தியின் பெற்றோர் தங்களது மகளை காணவில்லை என்று புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் ரஞ்சித்குமாருக்கும், ஆர்த்திக்கும் திருமணம் நடந்தது அவர்களது பெற்றோர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து காதல் திருமண ஜோடி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில்  நேற்று தஞ்சம் அடைந்தனர். இன்ஸ்பெக்டர் சுமதி, இருவரின் பெற்றோர்களையும் அழைத்து விசாரித்தார்.

 

தொடர்ந்து பேச்சுவார்த்தையில் இரு குடும்பத்தினருக்கும் கருத்துவேறுபாடு தொடர்ந்து நிலவியது. இதனால் கூச்சலும் அதிகரித்ததால் சிறிது நேரம் பரபரப்பாக காவல் நிலையம் முழுவதும் காணப்பட்டது. பின்பு காவல்துறை தரப்பில் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் ஆகையால் இரு குடும்பத்தாரும் ஒற்றுமையாக சேர்ந்து வாழ வேண்டும் என அறிவுரை வழங்கினர். ஆனால் பெண் வீட்டார்கள் முழுமையாக இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

 



 

மேலும் தொடர்ந்து  ஆர்த்தியின் பெற்றோர், அவரை தங்களுடன் வருமாறு அழைத்தபோது,  ரஞ்சித்குமாருடன்  செல்வதாகவும் நான் அவரை  காதலித்து முழுமனதுடன் திருமணம் செய்து கொண்டேன் ஆகையால் அவருடன் சேர்ந்து வாழ்ந்தால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என தனது பெற்றோர்களிடம் ஆர்த்தி கூறியுள்ளார்.

 

இதையடுத்து காவல்துறையினர் ரஞ்சித்குமார் மற்றும் அவரது பெற்றோருக்கு அறிவுரை கூறி ஆர்த்தியை அவர்களுடன்  அனுப்பி வைத்தனர். இதற்கிடையே பேச்சுவார்த்தையின்போது வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.