பெரம்பலூரை சேர்ந்தவர் செல்வராஜ், இவருக்கு முத்துநகரில் சொந்தமாக வீடுகள் உள்ளது. அந்த வீடுகளை அவர் வாடகைக்கு விட்டு இருக்கிறார். அதில் ஒரு மாடி வீட்டில் காரைக்குடியை சேர்ந்த சர்வானந்தம் என்பவரின் மனைவி ஆனந்தியும் (வயது 66), மகன் ஸ்ரீராம்குமாரும் (34) கடந்த ஒரு ஆண்டாக வசித்து  வருகின்றனர்.


மேலும், ஸ்ரீராம்குமார் திருச்சியில் புகைப்பட கலைஞராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை அந்த வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசதொடங்கியது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இதுகுறித்து பெரம்பலூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.


இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டின் கதவை திறக்க முயற்ச்சி செய்தனர், ஆனால் வீட்டின் கதவு உள்புறமாக பூட்டபட்டு இருந்தது.


தாய் - மகன் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு 


இதனை தொடர்ந்து போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் ஹாலில் ஆனந்தியின் உடல் அழுகிய நிலையிலையும், படுக்கை அறையில் ஸ்ரீராம்குமார் தூக்கில் பிணமாக தொங்கிபடி இருந்தார். 


வீட்டில் தாயும்,மகனும் இறந்து கிடந்த தகவல் அந்த பகுதியில் பரவியது. இதனால் அங்கு பொதுமக்கள் பலர் கூடினர். பின்னர் போலீசார் கூட்டத்தை கலைத்து விட்டு, உடல்களை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். மேலும் மருத்துவ பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடல்கள் அனுப்பி வைக்கபட்டுள்ளது. 


மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவியும் வந்து ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். அப்போது ஆனந்தியின் உடலின் மேல் துணி போர்த்தப்பட்டிருந்தது. மேலும் அவரது உடலை சுற்றி தர்ப்பை புல், எலுமிச்சைப்பழம், மிளகாய், தேங்காய், மஞ்சள் தூள், மிளகாய் பொடி, மல்லி பொடி, ஆரஞ்சுப்பழம், உப்பு உள்ளிட்ட பொருட்கள் சுற்றி போடப்பட்டிருந்தது. 




தாயை கொலை செய்து விட்டு மகன் தற்கொலையா - போலீசார் விசாரணை


மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர். குறிப்பாக தாய் ஆனந்தியை கொலை செய்து மாந்திரீகம் மூலம் ஏதாவது செய்ய முயற்ச்சி செய்தாரா, இல்லை தாய் இறந்த சோகத்தில் மகன் ஸ்ரீராம்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா?


அல்லது ஆனந்தி இறந்ததை வெளியே கூறாமல் அவருக்கு வீட்டில் இறுதிச்சடங்கு செய்து விட்டு ஸ்ரீராம்குமாரும் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.


இந்நிலையில் வீட்டில் காவல்துறையினர், தடவியல் துறையினர் நடத்திய சோதனையில் ஒரு கடிதம் சிக்கியது, அந்த கடிதத்தில் ஆனந்தியின் குடும்பத்தை பற்றி உருக்கமாக எழுதப்பட்டிருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்தனர். அந்த கடிதத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் தாய், மகன் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.