திருச்சி மாநகர காவல்துறை ஆணையராக காமினி பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக பொதுமக்களை அச்சுறுத்து வகையில் வழிப்பறி, திருட்டு ,கொள்ளை சம்பவங்களின் ஈடுபடுபவர்களை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் திருச்சி மாநகர் பகுதிகளில் பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை உடனடியாக கைது செய்து சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து அவ்வபோது பொதுமக்களிடையே காவல்துறை தரப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்திய 60-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து திருச்சி மாநகரில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். போதைப் பொருள் விற்பனை செய்பவர்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி உத்தரவிட்டுள்ளார்.
திருச்சியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல், ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது
இந்நிலையில் கடந்த 16.06.2024-ந்தேதி கண்டோன்மெண்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வ.உ.சி ரோட்டில் இளைய சமூகத்தை சீரழிக்கும் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை வெள்ளை நிற பையில் வைத்து இளைஞர்களுக்கு விற்பனை செய்வதாக கிடைக்கபெற்ற தகவலின் பேரில் சம்பவ இடம் சென்று காவல்துறையினர் சோதனை செய்தனர்.
அப்போது அங்கு சந்தேகம்படும்படியாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து சோதனை செய்ததில் சுமார் 12 கிலோ கஞ்சாவை வெள்ளை நிற பையில் வைத்திருந்த இராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுக்கா, அச்சங்குளத்தை சேர்ந்த செல்வம் என்பவரை கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்தும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனவே, குற்றவாளியின் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்யபட்டது. இதனை தொடர்ந்து திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து குற்றவாளி மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், திருச்சி மாநகரில் கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனையில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.