திருச்சி மெயின் கார்ட்கேட் அருகே உள்ள அருணாச்சலம் மன்றத்தில் திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக தேர்தல் ஆலோசனை  கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ரெக்ஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினராக திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர், காங்கிரஸ் கட்சியின்  பேச்சாளர் திருச்சி வேலுச்சாமி  கலந்து கொண்டனர்.


கூட்டத்தில் பேசிய எம்பி. திருநாவுக்கரசர் கூறியதாவது : தமிழ்நாட்டில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், மற்றும்  கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பணியாற்றி வெற்றி பெற செய்ய வேண்டும். திருச்சி நாடாளுமன்ற தொகுதியை பொருத்தவரை  தலைவர், பொறுப்பாளர், மண்டல பொறுப்பாளர்கள், பகுதி, வட்டம், பேரூராட்சி, நகராட்சி ,மாநகராட்சி மற்றும் வார்டு தலைவர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தேர்தல் நேரத்தில் மக்களை சந்தித்து வாக்குகள் கேட்கும்போது திமுக அரசு மக்களுக்கு செய்த திட்டங்களை எடுத்துரைக்க வேண்டும், அதேபோன்று மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியின் போது மக்களுக்கு செய்த திட்டங்கள், அதனால் ஏற்பட்ட மாற்றங்கள் அனைத்தையும் மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.




அதே சமயம் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு திட்டங்கள், இலவச பேருந்து பயணம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நன்கு ஆய்வு செய்து பொதுமக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும். குறிப்பாக பாஜக ஆட்சியின்போது அவர்கள் மக்களுக்காக எடுத்துரைத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை, அதற்கு மாறாக மக்களை இன்னல்களை சந்திக்கும் அளவிற்கு அவர்கள் திட்டங்கள் மற்றும் விலைவாசி உயர்வுகள் அமைந்தது. பாஜக ஆட்சியில்  சர்வாதிகார போக்கு கடைபிடிக்கப்படுகிறது. பாஜக செய்த தவறுகள், ஊழல்களை, மக்கள் இடையே நமது கட்சியின் நிர்வாகிகள் கொண்டு சென்று தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும்” என்றார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பாக திருச்சி மாநகராட்சியில் இருக்கக்கூடிய 65 வார்டு தலைவர்கள் பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து அவர்களை பாராட்டினார்.


இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருநாவுக்கரசர்  கூறியதாவது :  


வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, புதிய பதவிகள் வழங்குவது, புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  விரைவில் புதிய நிர்வாகிகளை திருச்சி மாவட்டம் முழுவதும் அமைப்பதற்கான  திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் தேர்தல் நேரத்தில் அவர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.




திமுக - காங்கிரஸ் கட்சி கூட்டணி பேச்சு வார்த்தைகள் இழுபறியாக உள்ளதா என்ற கேள்வி?? 


திமுக - காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை தொடக்கத்திலிருந்து சுமூகமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்சிகளும் தங்களுக்கு விருப்பமான தொகுதிகளையும், எண்ணிக்கையும்,  கூட்டணி பேச்சுவார்த்தையில் எடுத்துரைப்பது வழக்கம்தான் அதில் சில கருத்து வேறுபாடுகள், சில சிக்கல்கள், நிலவுவதால் பேச்சுவார்த்தை அடுத்தடுத்த கட்டத்திற்கு தள்ளிப் போகிறது. விரைவில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். அதன் பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைமை ஆலோசனை செய்து எந்தெந்த தொகுதியை நாம் போட்டியிடுவது, யார் வேட்பாளராக நிறுத்தலாம் என்று பின்பு அறிவிப்பார்கள். 


திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் தற்போது எம்பியாக நான் உள்ளேன், அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்.  ஆகையால் இந்த முறை எனக்கு சீட் வழங்க வேண்டும் என கூறியிருக்கிறேன் தலைமை என்ன முடிவு செய்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். என்னைப் போன்று எங்கள் கட்சியில் இருப்பவர்கள் பல தேர்தலில் போட்டியிட விருப்பமாக உள்ளார்கள் அவர்கள் தங்களுடைய கருத்துக்களை கட்சியின் தலைமைக்கு தெரிவிப்பார்கள். இறுதியாக கட்சியின் தலைமை என்ன முடிவு செய்கிறதோ அதற்கு அனைவரும் கட்டுப்படுவார்கள். தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி 4 முறை அல்ல 40 முறை வந்தாலும் இங்கு எந்த ஒரு மாற்றத்தையும் அவரால் ஏற்படுத்த முடியாது. நிச்சயம் இந்த தேர்தலில் பாஜக தமிழ்நாட்டில் வெற்றி பெறாது.