தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக பொதுமக்கள் கடந்த 2 ஆண்டுகள் வீட்டுக்குள் முடங்கி கிடந்த நிலையில் அவர்களுடைய அன்றாட தேவையான காய்கறிகள் அனைத்தும் அவர்களது வீட்டிற்கு அருகிலேயே வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தால் விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் அதிக அளவில் பயனடைந்தனர். எனவே அதனைத் தொடர்ந்து செயல்படுத்தும் நோக்கில் தமிழக வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம். ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் கொரோனா காலகட்டத்தில் பின்பற்றப்பட்ட நடமாடும் விற்பனை முறையானது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிப்பதோடு, விவசாயிகளும், நுகர்வோர்களும், பயனடையும் வகையில் இருந்ததால் தமிழகத்தில் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை அதே நடமாடும் விற்பனை திட்டம் மூலம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் கடந்த டிசம்பர் மாதம் அந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி வேளாண்மை மட்டும் விவசாயிகள் நலத்துறையின் ஒரு அங்கமான விற்பனை துறையானது முதல் கட்டமாக சென்னை, திருச்சி, கோவை, சேலம், திருப்பூர், உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் இந்த நடமாடும் காய்கறி விற்பனை திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளனர்.




அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து வேளாண்மை துறை விற்பனை துறை அதிகாரிகள் கூறுகையில், "வேளாண்மை துறை இந்த திட்டத்தை முன்னெடுக்க காரணம் கடந்த காலங்களில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை நேரடியாக பொதுமக்களிடம் கொண்டு சேர்த்ததால் நுகர்வோர்களுக்கு நல்ல தரமான காய்கறிகள் கிடைத்தது. விவசாயிகளுக்கும் தங்களுடைய உற்பத்தி பொருள்கள் வீணாகாமல் நேரடியாக நுகர்வோர்களிடம் கொண்டு சேர்த்து அதன் மூலம் நல்ல வருமானமும் கிடைத்தது. தற்போது இந்த திட்டத்தை பண்ணையில் இருந்து "இல்லம் தேடி" என்ற பெயரில் இனி வரும் காலங்களில் தொடர்ந்து செயல்படுத்துவதற்காக வேளாண்மை துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, வெளியிடப்பட்ட அரசாணையின்படி, தமிழகத்தில் 5 மாநகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு ஒரு மாநகராட்சிக்கு தல 6 வாகனங்கள் என மொத்தம் 30 வாகனங்கள் மற்றும் ஒரு விவசாயிக்கு தலா 2 லட்சம் மானியம் வீதம் 60 லட்சம் மானியத்துடன் பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.  திருச்சி மாவட்டத்தில் இந்த திட்டத்திற்கான முதல் கட்டமாக 6 இளைஞர்களை தேர்வு செய்துள்ளோம். மேலும், அவர்கள் கட்டாயம் பன்னிரென்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும், அந்த இளைஞர் ஒரு விவசாயியாக இருக்க வேண்டும் என்ற விதிமுறைகளை வைத்துள்ளோம்.




மேலும் அந்த இளைஞர்கள் சொந்தமாக ஒரு டாட்டா ஏசி வாகனத்தை வாங்கி அதை விற்பனை நிலையமாக மாற்றுவதற்கான வடிவில் அந்த வாகனத்தை மாற்றிக்கொள்ள அரசு சார்பில் 2 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. தற்போது 2  இளைஞர்கள் தயார் நிலையில் உள்ளனர். மீதமுள்ள 4 பேர் வாகனங்களை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த ஆறு இளைஞர்களுக்கும் திருச்சி மாநகராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் அண்ணா நகர், மற்றும் கே.கே. நகர் உழவர் சந்தைகளை தலா 3  நபர்களுக்கு ஒரு சந்தை என பிரித்து கொடுத்துள்ளோம்.  இந்த உழவர் சந்தைகளுக்கு தங்களுடைய உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு வரும் விவசாயிகளிடமிருந்து காய்கறிகள் பெறப்பட்டு அந்த வாகனம் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து நேரடியாக  நுகர்வோர்களிடம் விற்பனைக்கு செல்லும்படி வடிவமைக்கபட்டுள்ளது. மேலும் இந்த வாகனத்திலேயே டிஜிட்டல் எடை இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் அன்றைய தினம் காய்கறிகளின் விலைப்பட்டியலும் அந்த வாகனத்தில் இடம்பெற்று இருப்பதால் நுகர்வோர்கள் பேரம்  பேச வேண்டிய நிலை ஏற்படாது.  எனவே இந்தத் திட்டத்தை டிசம்பர் மாதம் 2- வது  வாரத்தில் தமிழக முதல்வர் தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன் பின் இந்த திட்டம் தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது படித்த இளைஞர் விவசாயிகளை ஊக்கப்படுத்தி அவர்களின் வருமானத்தை பெருக்கவும், மற்ற விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்து அதன் மூலம் அந்த விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவும், இந்த திட்டம்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தனர்.