கொரோனா பொது முடக்கத்தால் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தனியார் பள்ளிகளில் இணையவழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ‘கல்வி தொலைக்காட்சி’ மூலம் பாடம் நடத்தப்பட்டது. இருந்தும் இணையம், தொலைக்காட்சி போன்ற எவ்விதத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாத கிராமப்புற மாணவர்களின் கல்வி கேள்விக்குறியானது. பொதுமுடக்கத்தால் பல குடும்பங்கள் மரணம், உடல்நலப் பாதிப்பு, வேலையிழப்பு எனப் பெரும் பாதிப்புகளுக்கு ஆளாகின. இதனால், மாணவர்களின் பள்ளி இடைநிற்றல் அதிகரித்தது. இப்படியான கொடும் சூழல்களிலிருந்து மாணவர்களை மீட்டெடுத்து அவர்களுடைய பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாகச் சொல்லப்படுகிறது. கரோனா ஊரடங்கால் மாணவர்களுக்கும் பள்ளிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இடைவெளியைக் குறைத்து மாணவர் களைப் பள்ளியை நோக்கி இழுக்கும் நோக்கத்துடன் ‘இல்லம் தேடிக் கல்வி’ என்கிற திட்டத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு சில மாதங்கள் முன்பு தொடங்கி வைத்தார். மாணவர்கள் வசிக்கும் இடத்துக்கே சென்று கற்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டம் தன்னார்வலர்களின் துணையோடு செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப் பட்டிருந்தது.



இந்த கல்வித்திட்டத்தின் படி மாணவர்களுக்கு தவறான கல்வி முறையும், மதம் சார்ந்த கல்வி முறையும் கற்பிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தமிழக அரசியல் கட்சிகளும் கல்வி அமைப்புகளும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். தமிழக முதலமைச்சர் இந்த திட்டத்தை அறிவித்ததும், திமுக கூட்டணி கட்சிகளே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் அத்தகையை முறைகேடுகள் நடக்காது கல்வித்துறை தொடர்ந்து அறிவித்து வருகிறது. மேலும் இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வீடு தேடி கல்வித்திட்டம் குறித்த புரிதலை மக்கள் மத்தியில் ஏற்படுத்த கலை மூலமாக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய முடிவெடுக்கப்பட்டு தமிழகம் முழுவதும் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பெற்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதில் திருச்சியை சேர்ந்த சர்மிளா சங்கர் குழுவில் இருப்பவர்கள் வீடு தேடி கல்வித்திட்டம் சீருடையை அணிந்துகொண்டு மதுக்கடையை மது வாங்கி செல்லும் விடியோ வெளியாகி விமர்சனத்திற்குள்ளானது. 






அந்த நபர் அவர் வாங்கிய மதுவை எடுத்துக்கொண்டு வீடு தேடி கல்வித்திட்டத்திற்கு விழுப்புணர்வு பிரச்சாரத்திற்காக கொடுக்கப்பட்ட காரில் ஏறி புரப்படுகிறார். இந்நிலையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய கலை பயணம் சென்ற சர்மிளா சங்கர் தலைமையில் ஆன குழு நெறிமுறைகளை மீறி நடந்து கொண்டதாக கூறி இந்த பிரச்சாரத்திலிருந்து நீக்கி திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட திட்ட முதன்மை கல்வி அலுவலர் ர. பாலமுரளி உத்தரவிட்டுள்ளார்.



இவரை குறித்து ஏற்கனவே அந்த உத்தரவு கடிதத்தில் எழுதப்பட்டுள்ளதாவது, "திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்திற்காக 8 விழிப்புணர்வு பிரச்சாரக் குழு ஈடுபட்டுவந்தது. இப்பிரச்சாரக்குழவில் ஒன்றான சர்மிளா சங்கர் தலைமையிலான கலைப் பயணக்குழு, கலைக்குழுக்களுக்கான நெறிமுறைகளை மீறி நடந்து கொண்டது. எனவே இக்குழு மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சர்மிளா சங்கர் தலைமையிலான கலைப் பயணக்குழு விழிப்புணர்வு பிரச்சாரத்திலிருந்து முழுமையாக நீக்கப்படுகிறது." என்று எழுதப்பட்டுள்ளது.